தெரியாமல் போவதெல்லாம் காணாமல் போவதில்லை: கவிஞர் தணிகை
அப்பா, கதிரவனைக் காணவில்லை என்றான் அபூர்வன்
மிகத் திண்மையான மேகத்திட்டில் கதிரவன் மறைந்திருந்தது...
கொஞ்ச நேரம் பொறு கண்ணு, அவசரப் பட்ட அபூர்வனை காண வைத்தார் கதிரவனை.
கைகளைத் தட்டியபடியே குழந்தை குதூகலித்தது.
நிலா எப்ப அப்பா வரும்,
வரும் வரும் இரவு வந்தவுடன் வரும் கதிரவன் சென்றவுடன் வரும்....இப்பகூடப் பார் மங்கலாகத் தெரிகிறதே...
விண்மீன்களை எல்லாம் காணவில்லையே?
இரவு வந்தது, கண்சிமிட்டிய விண்மீன் தொகுதிகளைப் பார்த்த குழந்தை மறுபடியும் ஆர்ப்பரித்தது.
எதெல்லாம், வீனஸ், நெப்டியூன், புதன், யுரேனஸ், சனி, வியாழன், செவ்வாய் என்று
தெரியாத போதும் அதெல்லாம் இருந்தன... பெயர் எல்லாம் மனிதர் கூட்டத்தின் அடையாளத்துக்குத்தானே! திசை எல்லாம் சென்றடையத்தானே.
எதுவுமே மறைவதுமில்லை, தோன்றுவதுமில்லை , இருக்கின்றன, பயணம் செய்கின்றன வாழ்வு முடிந்ததும் இல்லாமல் போகின்றன.
புவி நமை நமது வீடுகளை காடுகளை, ஆறுகளை, கடல்களை, மலைகளை எல்லாம் சுமந்தபடியே
சுற்றிக் கொண்டே பயணம் செய்கிறதே நம்மை சிந்தி சிதறி வீசி எறிந்து விடாமல்...விண்வெளியில்...
நீயும் உனது பாட்டியுடன் காரில் கோவிலுக்கு எல்லாம் செல்லும் போது (வாடகைக் காரில்தான்) நீ, காரில் இருப்பது தெரியாமலே வழியில் கடந்து போகும் மகிழ்வூர்திகளை எல்லாம் பார்த்து கார், கார் என்று கூவுவாயே, அப்போது உனக்குத் தெரியாதல்லவா நீ இருப்பதும் ஒரு காரில் என்பது...அதே போல இந்த புவியின் பயணம் அதில் நாம் கொஞ்ச நாள் பயணம் செய்வோம்.
எல்லாம் ஒரு தோற்றம் அதையே மாயை என்பாரும் உண்டு.
பசியும் கொசுவும் அதற்குள் கடிக்க ஆரம்பித்து எல்லாம் அனுபவத்தால் உணர்தல் நிகழ்கிறது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
சந்திரன், சூரியன், கதிரவன் என்ற ஆண்பால் விகுதிகூடத் தவறானதே.கதிர்,நிலா என்பதோடு சீர் செய்யப் பட வேண்டிய பெயர்கள் அவை. அல்லது விண்மீன், துணைக் கோள்
No comments:
Post a Comment