Tuesday, July 30, 2024

மேட்டூர் அணையும் தொழில் நுட்பமும்: கவிஞர் தணிகை

 மேட்டூர் அணையும் தொழில் நுட்பமும்: கவிஞர் தணிகை



மேட்டூர்க்காரர்கள் மற்றும் சரித்திர புள்ளி விவரங்கள் மேல் பற்றுள்ளார்க்கு இந்த அணையின் சிறப்பு பற்றி சொல்லத் தேவையில்லை. என்றாலும் தற்போதைய ஒரு செயல் இதைப் பற்றி எனைச் சொல்லத் தூண்டியிருக்கிறது. கட்ட ஆரம்பித்து 100 ஆண்டை நெருங்கியும் இதன் பலம் சொல்ல முடியாதது. மேலும் இந்த அணைக்கட்டும் காவிரியுமே தமிழகத்துக்கு நீர் வார்க்கும் தாய்.


16 கண்மாய் வளைவு வானவில்லை நிலத்தில் இறக்கி போட்டது போலவும், முக்கியத்துவம் குறிக்க ப்ராக்கெட் குறியிடும்போது இரண்டாவதாக போட்டு முடிக்கும் குறி போலவும் இருக்கும் இந்தக் எல்லீஸ் டங்கன் மதகுகள் மற்றும் பாலம் ஒரு அற்புத கட்டமைவு.இரு மலைகளுக்கு இடையே அணை கட்ட இடத் தேர்வு யாவுமே அற்புதம்


உபரி நீர் வந்து தானே வழிவது போலவும் அணைக்கு எந்த சேதமும் அதிக வெள்ளத்தால் பாதிப்படையாது காக்கவும் மற்றும் அணையின் நீளம், உயரம், அடிமட்டம் நீர் சேகரிப்பு புள்ளி விவர நில அளவுகள் பற்றி எல்லாம் எளிதாக உங்களுக்குத் தெரிய வர இன்றைய அறிவியல் துணை செய்கிறது. எனவே அவை பற்றியும் நாம் கூறியது கூறி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை.


அடுத்து கீழ் பாலம் எனப்படும் கீழ் மேட்டூரில் அமைந்துள்ள  அந்தப் பாலம் வாகனம் செல்லும்போது தொய்வடைந்து ஊஞ்சல் போல அசையும் ஆனால் உடைய வாய்ப்பில்லை எனவே அதைக் காக்கும் பொருட்டு நமது அரசுகள் அதற்கு மாற்று பாலங்கள் போக்குவரத்துக்கு என செய்து விட்டதைப் பற்றியும் நாம் சொல்லியாக வேண்டும்.


 நமது இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்தின் சர். ஆர்தர் காட்டன் நமது நாட்டின் நீர்ப்பாசனத் தந்தை என அழைக்கப் பெறுவது மாபெரும் சரித்திரம் அதைப்பற்றி எல்லாம் இந்த சிறிய பதிவில் குறுக்கி சொல்ல எனக்கு எண்ணமில்லை இவை பற்றி எனது ஒரு கட்டுரையில் நதி நீர் இணைப்பு பற்றி எழுதியதில் தொண்ணூறுகளிலேயே குறிப்பிட்டு விட்டதாக நினைவு.


அவரால்தாம் முதன் முதலில் அணைக் கட்ட திட்டமிடப்பட்டு பார்வையும் இடப்பட்டது, அதன் பிறகு கவர்னர்கள் ஸ்டேன்லி, கட்டுமான வேலையை நிர்வாகம் வந்த ஸ்டேன்லி,எல்லீஸ் டங்கன், சர்.விஸ்வேஸ்வரய்யா, சர்.சி.பி. இராமசாமி இப்படி நிறைய பேர் குறிப்பிடத் தக்கவராகிறார்கள்.


சரி இப்போது ஏன் எழுதுகிறேன் எனில்: யாம் சிறுவனாக இருந்த போதிருந்து இந்த தாய்மடியை அடிக்கடி தரிசிக்க அந்தப் பக்கம் நடை போடுவது எனது பிடித்த வழக்கங்களில் ஒன்று. அப்படி செல்கையில் பல ஆண்டுகளில் அணை நிரம்பி வழிந்ததும் உண்டு. அப்போதெல்லாம் மதகை அதாவது 16 கண் கதவுகளை நீர் தொட்டுவிட்டாலே மகிழ்வு ததும்பும் அந்த நீர் கதவுகளின் இரு பக்கங்களிலும் இருப்பு கொள்ளாமல்  பீச்சி அடிக்கும் தரைப்பகுதி கண்ணாடியை நினைவு படுத்தும்படி நீர் விரைந்து செல்லும் கண் கொள்ளாக் காட்சிகள் அதில் விளையாட நிறைய பேர், மீன்களும் கூட தப்பி போகும்.இவை அணை முழு கொள்ளளவை எட்டும் முன்பே நடப்பவை.அப்போதெல்லாம் அந்தப் பாலத்தில் அனைவரையும் சென்று வர அனுமதித்தும் வந்தனர்.


இப்போதும் எல்லாவற்றுக்கும் தடை ஏற்படுத்துமளவு மனிதர்களின் குணம் மலிந்து விட...


நேற்று நாங்கள் பார்க்கும் போது கதவு நிறைய இன்னும் 2 அடி மட்டுமே பாக்கி, அதாவது 118 அடி அந்தப் பக்கம் பாசனத்துக்கு இருபதாயிரம் கன அடிக்கும் மேல் வெளி அனுப்பியும்...

ஆனால் துளி நீர் கூட கதவின் இருப்பக்கங்களிலும் இருந்து கசிவில்லாமல், கீழ் பக்க காரையிலும் நீர் வெளிவராமலும் மிகத் துல்லியமாக அரசுப் பணி நடைபெற்றிருப்பதைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.


மதகை, இயற்கையாக கொள்ளும் நீருக்கும் மேல் இயல்பாக 120அடிக்கும் மேல் நீர் வந்தால் மட்டுமே வழியுமளவு வெளியேறுமளவும் கீழ் இறங்கி பெரு வாகனங்கள் கருவிகள் கொண்டு பணி செய்ததை ஒவ்வொரு கதவருகிலும் போகும் போதும் அவ்வழி வரும்போதும் கவனித்ததுண்டு. அதன் பலன் இதுதான் போலும்.


மனித தொழில் நுட்பம் வளர்ந்தபடியே இருக்கிறது.


உண்மையிலேயே பாராட்டத்தான் வேண்டும்.

குறையே சொல்லிச் சொல்லி பழக்கப் படும் எண்ணங்களுக்கிடையே இது போன்ற நிறையும் கவனிக்கப் பட வேண்டியது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை. 






Thursday, July 18, 2024

மல நுண்ணுயிர் மாற்று சிகிச்சை

 மல நுண்ணுயிர் மாற்று சிகிச்சை :நன்றி: பிபிசி



மருத்துவ சோதனையின் ஒரு பகுதியாக ரிக், வாராந்திர மல மாற்று சிகிச்சைக்கு உட்பட்டார்

"மல மாற்று சிகிச்சையின் முழு யோசனையும் நிச்சயமாக வித்தியாசமானது" என்று ரிக் டாலோவே கூறுகிறார். தானம் செய்யப்பட்ட மலம் தொடர்பான மருத்துவ சோதனையில் சேர முதலில் அழைக்கப்பட்ட தருணத்தை நினைவு கூர்ந்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

50 வயதான ரிக், ப்ரைமரி ஸ்க்லரோசிங் கோலாஞ்சிடிஸ் எனப்படும் அரிய நாள்பட்ட கல்லீரல் நோயின் அறிகுறிகளை நிர்வகிக்க, பிரிட்டனின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் வாராந்திர மல மாற்று சிகிச்சையின் இரண்டு மாதத் திட்டத்தை முடித்துள்ளார்.

"அது வெறும் மலம் அல்ல," என்று சிரிப்புடன் கூறிய அவர் மாற்று சிகிச்சை செயல்முறையை விவரிக்கிறார். "அதில் மாற்றம் செய்யப்படுகிறது. அது ஆய்வகத்தில் நடக்கிறது." என்றார் அவர்.

ரிக்கின் அரிய நோய்க்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர தற்போது வேறு எந்த சிகிச்சையும் இல்லை. இது பிரிட்டனில் 100,000 பேரில் ஆறு முதல் ஏழு பேரை பாதிக்கிறது. மேலும் ஆயுட்காலம் சுமார் 17 முதல் 20 ஆண்டுகள் வரை குறைகிறது.எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிக்கின் 42 வது வயதில் அவருக்கு இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

"நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். எதிர்காலத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். "ஒரு மலை உச்சியில் இருந்து விழுவதுபோல அது இருந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.

மல மாற்று சிகிச்சை என்றால் என்ன?
மல மாற்று சிகிச்சையில், உறைந்த மலத்தின் உறைவு நீக்கப்பட்டு. வடிகட்டப்பட்டு, சிரிஞ்சில் வைக்கப்படுகிறது.

மல நுண்ணுயிர் மாற்று சிகிச்சை (FMT), மல மாற்று சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. பல நாடுகளில் குடல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆயினும் பெரும்பாலும் மருத்துவ சோதனைகளின் ஒரு பகுதியாகவே இது உள்ளது.

ஆரோக்கியமான மல நன்கொடையாளர்கள் சோதிக்கப்பட்டு, அவர்களின் மாதிரிகளில் இருந்து குடல் பாக்டீரியாக்கள் எடுக்கப்பட்டு நோயாளியின் குடலில் இடமாற்றம் செய்யப்படுகின்றன. பொதுவாக கோலொனோஸ்கோபி, எனிமா அல்லது நாசோகாஸ்ட்ரிக் குழாய் வழியாக இது செலுத்தப்படுகிறது.

ரிக் சோதனை அடிப்படையில் பிஎஸ்சி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் தற்போது பிரிட்டனில் இந்த நோய்க்கு மட்டுமே இந்த செயல்முறை அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்படுகிறது என்று தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு சிறப்புக் கழகத்தின் (NICE) வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசில் (சி. டிஃப்) தொற்று உள்ள நோயாளிகள் பிரிட்டன் தேசிய சுகாதார சேவை (NHS) மூலம் சிகிச்சை பெறலாம். க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசில் (சி. டிஃப்) என்பது ஒரு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா ஆகும். இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். மேலும் நீண்ட காலமாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (ஆண்டிபயாடிக்ஸ்) பயன்படுத்துபவர்களை அது அடிக்கடி பாதிக்கிறது.

தேசிய சுகாதார சேவையான NHS க்கு, 50 மில்லி லிட்டர் திரவ மல மாதிரிக்கு 1300 பவுண்டுகள் (1684 டாலர்கள்) செலவாகிறது. மீண்டும் மீண்டும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கான செலவைக் காட்டிலும் இது குறைவாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சில சூழ்நிலைகளில், எஃப்எம்டியை ஒருமுறை மட்டுமே கொடுக்க வேண்டியிருக்கும்.

மனித மலத்தில் காணப்படும் ஆரோக்கியமான பாக்டீரியாக்களால் தயாரிக்கப்பட்ட வாய்வழி காப்ஸ்யூல்களையும் சில மருத்துவமனைகள் வழங்குகின்றன.

மலத்தை கொடையாகப் பெற வேண்டியது ஏன்?

புதிதாக கல்லீரல், சிறுநீரகம் அல்லது இதயம் தேவைப்படுபவர்கள் தகுந்த கொடையாளரைக் கண்டுபிடிக்க பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

இந்த முக்கிய உறுப்புகளைப் போலல்லாமல், மனித மலம் பரவலாகக் கிடைக்கிறது. இருப்பினும் மற்றவரின் மலம் பற்றிய எண்ணம் சிலருக்கு சங்கடமாக இருக்கலாம்.

ஆனால் ரிக் இந்த சங்கடத்தைப் புறந்தள்ளி அறிவியலை நம்புகிறார். மேலும் அவரது மனைவியும் நண்பர்களும் அவரது இந்தப்பயணத்தை ஆதரிக்கிறார்கள்.

"அதில் எந்த சங்கடமோ அதிர்ச்சியோ இல்லை" என்று ரிக் கூறுகிறார். "இது பலனளிக்கும் என்றால் ஏன் செய்யக்கூடாது என்பதே நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து நான் பெற்ற கருத்து,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆரோக்கியமான மல மாதிரிகள் பர்மிங்காமில் உள்ள மைக்ரோபயோம் சிகிச்சை மையத்தில் -80°C உறைவிப்பான் ஒன்றில் சேமிக்கப்படுகின்றன.

மல வங்கிகள்பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் இருக்கும் இந்த மைக்ரோபயோம் சிகிச்சை மையம் (MTC), பிரிட்டனில் உள்ள முதலாவது மூன்றாம் தரப்பு FMT சேவையாகும். நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு C.diff தொற்றுக்காக பாதுகாப்பாக சிகிச்சையளிப்பதற்கும், ஆராய்ச்சி சோதனைகளை நடத்துவதற்கும் மல மாதிரிகளை இந்த மையம் வழங்குகிறது.

இந்த மையத்தில் விரிவான மருத்துவ வரலாறு, வாழ்க்கை முறை மதிப்பீடுகள் மற்றும் அவர்களின் ரத்தம் மற்றும் மலத்தில் உள்ள நோய்க்கிருமிகளை பரிசோதித்தல் உள்ளிட்ட கடுமையான ஸ்கிரீனிங் செயல்முறைக்கு மல தானம் செய்பவர்கள் உட்படுகிறார்கள்.

முழுமையான சோதனைக்குப் பிறகு, ஆரோக்கியமான மல மாதிரிகள் 12 மாதங்கள் வரை -80°C உறைவிப்பான்களில் சேமிக்கப்படும். ஒரு நோயாளிக்கு மல மாற்று சிகிச்சை தேவைப்படும்போது, உறைந்த வடிகட்டிய மலம் உறைவு நீக்கப்பட்டு சிரிஞ்சில் போடப்படுகிறது.

"மல வங்கி இல்லாத நாடுகளில் இது கடினம். ஆனால் உண்மையில், உறைந்த எஃப்எம்டியைப் பயன்படுத்தவே பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நபர்களை சரியாகப் பரிசோதிக்க உங்களுக்கு நேரம் கிடைக்கும்,” என்று மைக்ரோபயோம் சிகிச்சை மையத்தின் இயக்குனர் பேராசிரியர் தாரிக் இக்பால் பிபிசியிடம் கூறினார். வெற்றிகரமான 10 நாள் நன்கொடைக் காலத்தின் முடிவில் அவர்கள் விரும்பும் அன்பளிப்பு அட்டையில் 200 பவுண்டுகள் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

பிஎஸ்சியில் எஃப்எம்டியின் பங்கு

ரிக் போல பிஎஸ்சி உள்ள நோயாளிகளில் 70 முதல் 80% பேர் குடல் அழற்சி நோயால் (IBD) பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் நீண்ட கால அழற்சி நிலை அதாவது கிரோன்ஸ் டிஸீஸ் மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் ஆகியவை இதில் அடங்கும்.

மக்களுக்கு பிஎஸ்சி ஏன் ஏற்படுகிறது அல்லது குடல் அழற்சியுடன் அதற்கு ஏன் தொடர்பு உள்ளது என்பது விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை என்று நாள்பட்ட கல்லீரல் நோய் மருத்துவரும் (hepatologist), இரைப்பை குடல் மருத்துவும் (gastroenterologist) மற்றும் ரிக் இன் மருத்துவச் சோதனைக்குப் பொறுப்பானவருமான மருத்துவர் பலக் திரிவேதி கூறுகிறார்.

"ஆரோக்கியமான குடல் மைக்ரோபயோட்டா கலவை மலத்தை பி.எஸ்.சி நோயாளிகளின் குடலுக்கு மாற்றி அது அவர்களின் கல்லீரல் நோய் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்க நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் விளக்கினார்.

மல தானம் செய்பவர்கள் ரத்தம் மற்றும் மலம், நோய்க்கிருமி சோதனைகள் உட்பட கடுமையான ஸ்க்ரீனிங்கிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மல மாற்று சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள்

தற்போது மல மாற்று சிகிச்சை என்பது நோயின் எந்த நிலைக்கும் அளிக்கப்படும் முதல் சிகிச்சை ஆப்ஷன் அல்ல என்கிறார் டாக்டர். ஹோரேஸ் வில்லியம்ஸ். லண்டன் இம்பீரியல் கல்லூரியின் இரைப்பைக் குடலியல் நிபுணரான அவர் FMT இல் முறையான வழிகாட்டுதல்களுக்கு பங்களித்துள்ளார்.

பிரிட்டனின் தேசிய சுகாதார அமைப்பு, தீவிரமான க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசில் (C. டிஃப்) நோய்த்தொற்றுகளுக்கு மட்டுமே FMT ஐ வழங்குகிறது, மற்ற நோய்களுக்கு அல்ல என்று டாக்டர் வில்லியம்ஸ் குறிப்பிட்டார். மேலும் மற்ற காரணங்களுக்காக சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகள் ரிக் செய்தது போல், மருத்துவ ஆய்வுகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

”பலர் எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமல் தானாகவே மல மாற்று சிகிச்சையை செய்கிறார்கள். இது நம்பமுடியாத அளவிற்கு ஆபத்தானது,” என்று லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் இரைப்பைக் குடலியல் நிபுணரும், பிரிட்டிஷ் சொசைட்டி ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜியின் (பிஎஸ்ஜி) எஃப்எம்டி வழிகாட்டுதலின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் பெஞ்சமின் முல்லிஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவின் விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டீவ் பிகோ உயிரியல் அறிவியல் மையத்தில் மருத்துவ உயிரியல் நிபுணரான டாக்டர் ஹாரியட் எதரெட்ஜ், ”அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல் செய்யப்படும் மல மாற்று சிகிச்சை, குறிப்பாக சுகாதார வசதி வளங்கள் குறைவாக உள்ள ஏழை நாடுகளில் தீங்கு விளைவிக்கும்" என்று குறிப்பிட்டார்.

இந்த சிகிச்சையானது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மரணத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

உறவினரின் மலமா அல்லது அந்நியரின் மலமா?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைத் தவிர, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் சோதனை ரீதியாக மல மாற்று சிகிச்சை பயன்படுத்தப்பட்டது. சில நோயாளிகள் மலம் மீதான வெறுப்பு மற்றும் பல்வேறு கலாசார, சமூக மற்றும் மத நம்பிக்கைகள் காரணமாக சிகிச்சையை ஏற்க தயங்குகின்றனர்.

"இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படும்போது மக்கள் சில சமயங்களில் மிகவும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள். மேலும் மருத்துவர் கேலி செய்கிறார் அல்லது சீரியஸாக இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்," என்று இந்தியாவில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் கல்லீரல் இரைப்பை குடல் மற்றும் கணைய பிலியரி அறிவியல் கழகத்தின் டாக்டர் பீயூஷ் ரஞ்சன் கூறினார்.எஃப்எம்டி பொதுவாக கொலோனோஸ்கோபி, எனிமா அல்லது நாசோகாஸ்ட்ரிக் குழாய் மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது.ஒரு அந்நியர் நன்கு பரிசோதனை செய்யப்பட்டவராக, ஆரோக்கியமானவராக இருந்தாலும் கூட அவரிடமிருந்து இல்லாமல் உறவினர்களிடமிருந்து மலத்தை ஏற்றுக்கொள்வது "ஓரளவு சரி" என்று சில நோயாளிகள் கருதுவதாக டாக்டர் ரஞ்சன் தன் அனுபவத்தின் அடிப்படையில் தெரிவித்தார்.

இதற்கு நேர்மாறாக பிரிட்டனில் க்ரோன்ஸ் நோய் மற்றும் கோலைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் , அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்து மலத்தை எடுக்காமல், அறியப்படாத சரிபார்க்கப்பட்ட மூலத்திலிருந்து மலத்தை பெற விரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

அதே கேள்வித்தாளில் பதிலளித்தவர்களில் 37% பேர் முதலில் மல மாற்று சிகிச்சையை ஏற்கத் தயார் என்று கூறினார்கள். ஆனால் செயல்முறை பற்றி மேலும் அறிந்த பிறகு அந்த எண்ணிக்கை 54% ஆக அதிகரித்தது.

"கல்வி எப்போதுமே நிறைய தடைச்சுவர்களை தகர்க்கிறது" என்று ஆய்வை நடத்திய டாக்டர் பிரட் பால்மர் பிபிசியிடம் கூறினார். இந்த சோதனை முயற்சி தனது அரிய நோயை குணப்படுத்த வழிவகுக்கும் என்று ரிக் நம்புகிறார்.

"மனித மலம் சில நோய்களை குணப்படுத்தும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது என்னிடம் கூறியிருந்தால் நான் அதை நம்பியிருக்க மாட்டேன். ஆனால் இப்போது அது உண்மையாகிவிட்டது. நடைமுறையிலும் உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

Wednesday, July 17, 2024

துளியாக ஒரு துளியாக சிறு துளியாக: கவிஞர் தணிகை

 துளியாக ஒரு துளியாக சிறு துளியாக: கவிஞர் தணிகை



சமூக ஊடகம் வழி இரு கருத்துகள் உள்ளடங்கி அலை பரப்பி வருகின்றன அதன் அதிர்வலைகள் மூலம்.


1. சிறு தாவரத்தின் வேர் பாறையை, மலையை பிளக்கிறது அது ஓரறிவுற்றதாக இருந்த போதிலும் என்ற கருத்து ஒன்றை ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார்.


அப்படி இருக்கும் போது 6 அறிவு படைத்த மனிதம், ஏன் எழாம் அறிவு, மூன்றாம் கண்,உள்ளுணர்வு பெற்ற மனிதம் அதன் ஆற்றல் உலகையே மாற்ற உதவலாமே என்ற கருத்து அதன் மூலம் வலியுறுத்தப் பட்டுள்ளது. 


சுயநலம், சுயநலமின்மை என்ற இரண்டு கூறுகளே உலகை ஆட்டிப் படைக்கிறது. பிரபஞ்ச விதிகள் அதன் பால் எப்படி ஆட்சி புரிந்த போதும்....


2. ஒரு கிறித்தவ அன்பர் ஒரு அழகான காணொளிக் காட்சியுடன் தமது உரையை பகிர்ந்திருந்தார்: அது: காட்டுத் தீயில் கானகமே பற்றி எரிய சிங்கம் புலி யானை காட்டெருமை போன்ற பல பெரிய விலங்குகள் எல்லாம் வெறுமே இருக்க...ஒரு தேன் சிட்டு தனது சிறு அலகால் ஆற்றில் இருந்து சிறு துளி நீரை கொண்டு வந்து அந்த தீ மேல் விட்டுக் கொண்டிருக்க மற்ற மிருகங்கள் அதை வீண் முயற்சி என, அதுவோ நான் வாழ்ந்ததன் நன்றிக் கடன், எனக்கு வாழ்வளித்த புவிக்கு நான் செய்யும் கைம்மாறு என்று முயற்சியைக் கை விடாமல் செய்ததான செய்தி எனது வாழ்வையும் நான் செல்லும் பாதையையும் ஊக்கப் படுத்துவதாய், பொருளுடன் தாம் இருப்பதுவாய் நிம்மதியுறச் செய்தது மீளவொண்ணாத் துக்கத்தில் ஆழ்ந்து கிடக்கையில்


3. இதற்கும் சுய விளம்பரம் தேடிக் கொண்டு தம்பட்டம் அடிப்பார்க்கும் எந்த தொடர்பும் இல்லை.அரசியல் பொருளாதாரம் இடது வலது என்பது எதற்குமே துளியும் தொடர்பில்லை. இது ஒரு இயற்கை விதி. இயற்கைக்கு சிறு மனிதம் விடும் சிறு துளி. இன்றைய உலகும் நாடும் அந்த அடர்ந்த காடாய் அடங்கா காட்டுத் தீயில் அணைக்க முடியாமல் எரிந்தபடி இருப்பதாகவே எண்ணுகிறேன். அதில் அந்த சிறு துளி ஏந்தும் தேன் சிட்டாகவே எனையும் கருதுகிறேன்.


4. காடு அல்ல பூங்கா ஒன்று அதில், வெட்டும்கிளி, மான், தேனீ என்ற ஒரு உவமைக் கதையில் யாம் எப்போதும் தேனீயாகவே இருக்கிறோம் இங்கு பூங்கா என்பதை இவ்வுலகு என்று சொல்லவா வேண்டும். அதில் தேனீ என்பதை யாம் என்பதையும் சொல்லவும் வேண்டுமோ?



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Saturday, July 13, 2024

ஆனந்த் அம்பானி திருமணச் செலவு 2675 கோடியாம் ஜியோ நெட் ஒர்க் விலை ஏற்ற காரணம்: கவிஞர் தணிகை

  ஆனந்த் அம்பானி திருமணச் செலவு 2675 கோடியாம், வரவு ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும்    எவ்வளவு?: கவிஞர் தணிகை




இந்தியன்:2 மற்றும் 3.பற்றி எல்லாம் எழுத பெரிதாக ஏதுமில்லை.

எழுதாமலே எனது நீண்ட காலம் போய்விட்டது.எழுத இரு புள்ளிகள் பொட்டு வெளிச்சங்கள்.ஒன்று இந்தியன் போன்ற படங்கள் வணிகத்தனமான வியாபரத்திற்கு மட்டுமே. இலஞ்ச ஊழலுக்கு எதிராக‌ போராடிச் செத்துச் சுண்ணாம்பு ஆகி வருவார் பற்றி எல்லாம் இவர்களுக்கு அக்கறை இல்லை. அதைப் பற்றி எல்லாம் மீடியா எழுத வேண்டும். மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். போராடும் குணம் வேண்டும். எங்கே அந்த சகாயம் போன்றோர்? எங்கே அறப்போர் இயக்கம்?( அறப்போர் இயக்கம் சமூக ஊடகத்தில் தமது முயற்சிகளை வெளியிட்டு வருவதை எம் போன்றோர் அறிய நேரிடுகிறது) எங்கே இலஞ்ச ஊழலுக்கு எதிரான நபர்கள் யாவரும் எல்லாம் என்று வெளிச்சம் போட்டால் நன்றாக இருக்கும். அதன் உண்மையான ஒருங்கிணைப்பு நிகழ்ந்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் நல்லதே.


அது போல 2675 கோடி திருமணச் செலவு செய்து விட்டு அதை பல கோடி வாடிக்கையாளரிடமிருந்து எவ்வளவு கோடிகள் மொத்தமாக வசூலிக்கிறார்கள் என்ற கணக்கையும் கொடுத்தால் அது நன்றாக இருக்கும். மக்களிடம் இருந்து வசூலிப்பது மொய் அல்ல. மொய் என்றால் திருப்பி வைக்க வேண்டும் அல்லவா? செலவு 5000 கோடி என்றும் அது அவர்கள் சொத்து மதிப்பில் புள்ளி 5(.5) சதவீதமே அது மிகவும் குறைவே என்றொரு ஜால்ரா ஊடகர் தெரிவித்த தகவலும் உண்டு.


இப்படி தனியாருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் கொண்டு சேர்ப்பதை விட மக்கள் அது போன்ற தனியார் நிறுவனங்களிடம் இருந்து வெளி வந்து விடலாம் .எந்த அரசாங்கமும் ஏழைகளிடமிருந்து இப்படி தந்திரமாக வசூல் செய்யும் பணத்தை தனிக் குடும்பம் செலவு செய்வதைத் தடுக்க எதுவுமே செய்ததாகத் தெரியவில்லை.


இந்தியா ஒரு பணக்கார நாடு. 2675 கோடியில்  ஒரு திருமணம் என்பது உலக வரலாற்றில் முதலாம். அதில் நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ஆட்டம் வேறு....ஏதோ சொல்லத் தோன்றியது. சொல்லி இருக்கிறேன். 


நாடும். நாட்டு மக்களும்...வீரப்பா வசனம் நினைவுக்கு வருகிறது. நான் ஒரு ஜியோ வாடிக்கையாளர் அல்ல.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை