நன்றி:
பி பி சி. தமிழ்
05/04/2023
சக்கர நாற்காலி கழிவறை: தமிழ்நாட்டு பெண் உருவாக்கிய மாடலின் சிறப்பும், கிடைத்த முதலீடும்
- திவ்யா ஜெயராஜ்
- பிபிசி தமிழ்
”மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நோயுற்றவர்கள் உட்பட இந்தியாவில் சக்கர நாற்காலி தேவைப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கிறது. இவர்கள் அனைவரும், தாங்கள் கழிவறை பயன்படுத்துவதற்கும், இயற்கை உபாதைகளை கழித்த பின்பு தங்களை சுத்தப்படுத்தி கொள்வதற்கும் அடுத்தவர்களின் உதவியை நம்பியே இருக்கின்றனர்.
ஆனால் இனி அவர்கள் அடுத்தவர்களை நம்பி இருக்க தேவையில்லை, தாங்களே சுயமாகவே இயங்கிகொள்ள நான் உருவாக்கியுள்ள பிரத்யேக சக்கர நாற்காலி அவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்கிறார் ஷ்ருதி பாபு.
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு நடுத்தர வர்க்க பெண்ணான ஷ்ருதி, 2016ஆம் ஆண்டு கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் இன்ஸ்ட்ருமெண்டேஷன் பொறியியல் (Biomedical Instrumentation engineering) படிப்பை முடித்தார். படிப்பை முடித்த பிறகு தொழில் முனைவோராக விளங்க வேண்டும் என்ற அவரின் கனவு இன்று நனவாகியிருக்கிறது.
கழிப்பறை வசதியுடன் சக்கர நாற்காலி
“படிப்பை முடித்த பிறகு உடனடியாக எந்த வாய்ப்பும் அமையவில்லை. ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். ஆனாலும் மனதிற்குள் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற கனவு மட்டும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. எனவே வேலை முடிந்து வந்தவுடன் அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்துவந்தேன். அப்போதுதான் மத்திய அரசின் BIRAC ஏஜென்ஸியுடைய ஃபெல்லோஷிப் (fellowship) கிடைத்தது. எனது லட்சியத்தை அடைவதற்கு இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொள்ள முடிவு செய்தேன்” என்று பிபிசியிடம் கூறினார் ஷ்ருதிபாபு.அவர் தொடர்ந்து பேசுகையில், “ இந்த ஃபெல்லோஷிப்புடைய கரு “முதியவர்கள்” என தெரியவந்தது. அதாவது முதியவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வகையில் ஏதேனும் ஒரு தயாரிப்பை நாம் உருவாக்க வேண்டும்.
எனவே, முதியவர்களின் தேவை பற்றி அறிந்துக்கொள்ள மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு சென்று ஆராய்ந்து வந்தேன். அப்படி ஒருநாள் மருத்துவமனையில் நான் பார்த்த காட்சி ஒன்றுதான் ’சஹாயதா’ என்னும் பிரத்யேக சக்கர நாற்காலி உருவாவதற்கு காரணமாக அமைந்தது.
மருத்துவமனையில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு செவிலியரிடம் ’பெட்பேன்’ (Bed pan) கேட்டார். ஆனால் அப்போது பெட்பேன் எதுவும் இல்லை என்று அவர் கூற, முதியவரின் இரண்டு மகள்களும் அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்து கழிப்பறைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அந்த இரண்டு மகள்களும் தங்களது தந்தையை தூக்கி சக்கர நாற்காலியில் அமர வைப்பதற்குள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
அதோடு தன்னுடைய பெண் பிள்ளைகள் தன்னை கழிப்பறைக்கு அழைத்து செல்லும் நிலை வந்துவிட்டதே என்று எண்ணி அவர் வேதனையடைந்தார். கழிவறைக்குள் சென்றதும் தன்னுடைய உடலை மறைத்துக் கொள்வதற்கு முயன்ற அவர் வெட்கத்தில் கூனி குறுகிப் போனார். இப்படியொரு நிலை வந்ததற்கு பதில் நான் இறந்து போயிருக்கலாம் என கண் கலங்கினார். இந்த சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது” என்று கூறுகிறார் ஷ்ருதி.
அவர் மேலும் கூறுகையில், "இது இவர் ஒருவருடைய பிரச்னையா அல்லது இவரை போல இருக்கும் அனைவரது பிரச்னையா என்பதை உறுதிப்படுத்திகொள்ள, மேலும் பல மருத்துவமனைகளுக்கும், காப்பகங்களும் சென்று ஆராய்ந்தேன். மும்பை, ஒடிசா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கும் பயணித்தேன். இறுதியில், சக்கர நாற்காலிகளை பயன்படுத்தும் அனைத்து தரப்பு மக்களும், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு தங்களுடைய சுய மரியாதையை இழக்கும் அளவிற்கு பெரும் சங்கடங்களை தினசரி சந்தித்து வருகிறார்கள் என்பது எனக்கு தெளிவானது.
எனவே சந்தையில் கழிப்பறை வசதியுடன் கூடிய சக்கர நாற்காலியே இல்லையா என்று தேடத் துவங்கினேன். கழிப்பறை வசதிகளுடன் சக்கர நாற்காலிகள் இருந்தன! ஆனால் என்ன இல்லை என்று பார்த்தால், இயற்கை உபாதை கழித்தப் பிறகு பயன்படுத்துபவர்கள் சுயமாக சுத்தப்படுத்தி கொள்ளும் வசதி எதுவும் அவற்றில் இல்லை. எனவே கழிப்பறை வசதியுடன், சுயமாக சுத்தப்படுத்திகொள்ள கூடிய வகையில் நான் சக்கர நாற்காலியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அது வெற்றியும் பெற்றுவிட்டது” என்று விவரிக்கிறார் ஷ்ருதிபாபு.
சஹாயதா எப்படி செயல்படுகிறது
தன்னுடைய தயாரிப்பு எப்படி செயல்படுகிறது என்பது குறித்து அவர் கூறும்போது, ”சஹாயதா பார்ப்பதற்கு ஒரு சாதாரண சக்கர நாற்காலி போன்றுதான் தோற்றமளிக்கும். ஆனால் அது சக்கர நாற்காலியாக மட்டுமல்லாமல், கழிப்பறையாகவும் அதனுடன் உடலை சுத்தப்படுத்துவதற்கான தொழில்நுட்பத்துடனும் செயல்படும்” என்று கூறுகிறார்.
”நாற்காலியின் உட்காரும் இடத்திற்கு அடியில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு ஏதுவாக சில வடிவமைப்புகளை செய்துள்ளோம். மிக முக்கியமாக அதனுள்ளே சுயமாக சுத்தப்படுத்தி கொள்ளும் வகையில், சில தொழில்நுட்ப அமைப்புகளைப் பொருத்தியுள்ளோம். நாற்காலியின் மொத்த தொழில்நுட்பமும், பயன்படுத்துபவர்கள் எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இயற்கை உபாதைகளை கழித்த பின், உடலை சுத்தப்படுத்தி கொள்ளும் தொழில்நுட்பத்தை பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளோம்.
இதனை பிடே தொழில்நுட்பம் (Bide Technology) என்று கூறுவோம். இது ஏற்கனவே நவீன கழிப்பறை வடிவமைப்புகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்தான். ஆனால் உலகளவில் இந்த தொழில்நுட்பத்தை முதன்முறையாக சக்கர நாற்காலியில் பொருத்தி, வடிவமைத்துள்ளது நான்தான்.
சஹாயதா பயன்படுத்துபவர்கள் உடல் உபாதைகளை கழித்து, சுயமாகவே சுத்தம் செய்துகொண்ட பிறகு, கழிவுகளை எடுத்து அப்புறப்படுத்துவதற்கு மட்டுமே பிறரின் உதவி தேவை. இது ஒரு குறைந்தபட்ச உதவிதான்” என்று விவரிக்கிறார் ஷ்ருதிபாபு.
சோதனை முயற்சியில் கிடைத்த வெற்றி
“நாம் உருவாக்கிய தயாரிப்பு நன்றாகத்தான் இருக்கிறது என நாம் நினைத்து கொள்வோம். ஆனால் அதை பயன்படுத்துபவர்களின் கருத்துகளை கேட்கும்போதுதான் தயாரிப்பு உண்மையிலேயே பொருளுள்ள வகையில் உருவாகியிருக்கிறதா என்பது நமக்கு தெரியவரும்.
எனவே சஹாயதா உருவான பின்பு சோதனை செய்வதற்காக, பல மருத்துவமனைகளுக்கு சென்றேன். ஆனால் தனியார் மருத்துவ கல்லூரியான சென்னை தாகூர் மருத்துவ கல்லூரிதான் தங்களது நோயாளிகளிடம் சோதனை செய்து பார்ப்பதற்கு எங்களுக்கு அனுமதியளித்தது. அப்போது இதை பற்றி தெரிந்துகொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும் அங்கிருந்தவர்கள் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
பயன்படுத்திப் பார்த்தவர்கள் வசதியாக இருப்பதாக கூறினர். இதில் என்ன ஆச்சரியம் என்றால், சோதனை முயற்சிகாக சென்ற இடத்திலேயே, சஹாயதாவை வாங்குவதற்கு 50 முன்பதிவுகள் கிடைத்தன. என்னுடைய தயாரிப்பின் வெற்றி இதுதான்” என்று மகிழ்கிறார் ஷ்ருதி பாபு.
”இதில் மற்றொரு நிகழ்வையும் நான் குறிப்பிட வேண்டும். சஹாயதா பயன்படுத்திய முதியவர் ஒருவர் என்னிடம் வந்து கண்கள் கலங்க நன்றி கூறினார். சாப்பிட்டவுடன் தனக்கு மலம் கழிக்கும் நிலை உருவாகும் எனவும், அதன் காரணமாகவே இத்தனை நாள் தனது மகன் மாலை வீட்டிற்கு வரும் வரை சாப்பிடாமல் இருந்ததாகவும் தெரிவித்த அவர், தற்போது நான் தயாரித்த சக்கர நாற்காலியை பயன்படுத்த தொடங்கிய பிறகு யாருடைய உதவியும் இல்லாமல் தானாகவே உபாதைகளை கழித்து கொள்வதாக கூறினார். அவருடைய சொற்கள் என்னை நெகிழ வைத்தன.
” முதலில் ஒரே ஒரு மாடலில்தான் இந்த சக்கர நாற்காலியை நான் உருவாக்கினேன். அதை நாற்காலியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம், படுக்கையாகவும் மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் சிலர் எங்களுக்கு படுக்கை வசதியெல்லாம் தேவையில்லை என்றனர். எனவே சக்கர நாற்காலியாக மட்டும் இயங்க கூடிய ஒரு வடிவிலும், படுக்கை வசதிகளுடன் கூடிய மற்றொரு வடிவிலும் இப்போது இரண்டு வகைகளில் சக்கர நாற்காலிகளை உருவாக்கியுள்ளேன்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பக்கபலமாக இருந்த தந்தை
”சஹாயதாவின் தொழில்நுட்பமும், வடிவமும் என்னுடைய சிந்தனையில் உருவானவை. ஆனால் இதனை உருவாக்கும் முயற்சியில் என்னுடைய தந்தை எனக்கு மிகப்பெரும் பலமாக இருந்து உதவினார்” என்று கூறுகிறார் ஷ்ருதி.
அவர் மேலும் கூறுகையில், “ எனது தந்தை ஒரு மெக்கானிக்கல் பொறியாளர். சிறியதாக ஒரு பட்டறை வைத்து வேலை செய்து வந்தார். சஹாயதாவின் மருத்துவ ரீதியிலான தேவை, வடிவமைப்பு போன்றவற்றை கையாள்வது என்னுடைய பொறுப்பாக இருந்தது. அதை உருவாக்குவதற்கு தேவையான மெட்டீரியல்களை தேர்ந்தெடுப்பது, தொழில்நுட்ப ரீதியாக வடிவமைப்பது போன்றவற்றை எனது தந்தை கையாண்டு வந்தார்.
மொத்தம் 118 முறை பல்வேறு வடிவங்களில்(Prototype) இதை உருவாக்கி பார்த்தோம். அனைத்தும் தோல்வி அடைந்தன. குறிப்பாக முதன்முதலாக உருவாக்கிய வடிவம் பார்ப்பதற்கு ஒரு ரோபோ போல காட்சியளித்தது. அதை எடுத்துக்கொண்டு மருத்துவமனை சென்றபோது எங்களை உள்ளேயே விடவில்லை. அந்த ரோபோவை பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது என்று கூறினர்.
பின் மீண்டும் பல வடிவங்களில் முயற்சி செய்து, இறுதியில் தற்போதைய வடிவில் இந்த சக்கர நாற்காலி உருவாகியுள்ளது. என்னுடைய அத்தனை முயற்சியிலும் எனது தந்தை எனக்கு ஆதரவாக இருந்தார். இந்த தயாரிப்பை முறையாக சந்தைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே `தன்வந்திரி பயோமெடிக்கல்` என்ற நிறுவனத்தை நிறுவினோம்.
சஹாயதா முழுமையான வடிவம் பெற்ற பிறகு, இதை எப்படி சந்தைப்படுத்துவது என்பது பற்றி தெரிந்துகொள்வதற்காகவும், ஒரு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காகவும் நான் சென்னை சென்றிருந்தேன். கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக நான் தயாராகி கொண்டிருந்தபோது வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. என் தந்தை மாரடைப்பில் இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அந்த கனம் நான் முற்றிலும் உடைந்துவிட்டேன்” என்று தனது தந்தையின் நினைவுகள் குறித்து கலங்குகிறார் ஷ்ருதி.
“என் தந்தை இறந்தபிறகு, குடும்பத்தின் பொறுப்பு என்னிடம் வந்தது. என்னுடைய அம்மாவையும், தம்பியையும் இனி நான்தான் கவனித்துகொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட, எனது தந்தையுடன் சேர்ந்து நான் துவங்கிய இந்த முயற்சியை வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற லட்சியமும் எனக்குள் வந்தது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஒரு பெண் தனியாக முன்னேறுவது அவ்வளவு எளிதல்ல
”என் தந்தை இறந்து அடுத்த மூன்று மாதங்களில், தீவிரமாக உழைத்து எனது பிரத்யேக சக்கர நாற்காலியை நான் சந்தைக்கு கொண்டு வந்தேன். பல வணிக ரீதியான நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இது குறித்து விளம்பரப்படுத்தினேன்.
ஆனால் எனக்கு எதுவும் அவ்வளவு எளிதாக அமையவில்லை. ஒரு பெண்ணாகவும், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்கொள்வது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.
பி.ஆர். கிருஷ்ணகுமார் என்ற மருத்துவர் இந்த பயணத்தில் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். அவர் எனக்களித்த ஒரு சிறு இடத்தில்தான் இப்போது வரை இந்த நாற்காலியின் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. அதேபோல் அனைத்து சூழல்களிலும் எனது குடும்பம் எனக்கு துணையாக நின்றது. எனது கணவர் எனக்கு பிடித்ததை செய்யுமாறு ஊக்கப்படுத்துகிறார். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவே நான் தொடர்ந்து முன்னேற வேண்டும்.
சமீபத்தில் கூட` ஷார்க் டேங்க்` (shark tank) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் அளவிற்கான முதலீட்டை இந்த சக்கர நாற்காலிக்காக பெற்றுள்ளேன். எனவே இதனுடைய தயாரிப்பை இனி பெரிய அளவில் எடுத்துச் செல்லவிருக்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 10,000 நாற்காலிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியைத் துவங்கியுள்ளேன். இந்திய அளவிலும், உலக அளவிலும் உள்ள மக்கள் இதனால் பயன் அடைய வேண்டும், அவர்களது சுயமரியாதை காக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய அடுத்த லட்சியம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஷ்ருதிபாபு.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment