ஜெய் பீம்: சினிமா சிலிர்க்க வைக்கிறது: கவிஞர் தணிகை
சினிமா என்றாலே நவரசங்களையும் சேர்த்து ஜனரஞ்சகமாக அல்லது ரஜினி படம் போல மாஸ் காண்பித்தால் மட்டும் போதும் என்ற பார்முலாவை விட்டு விலகி உண்மையைச் சரியாகச் சொல்லி இருக்கும் படம் இந்த ஜெய் பீம்.
சூரியாவின் திரைப்பட வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ் சினிமா வரலாற்றிலும் இது தடம் பதிக்கும் படமாக விளங்கும்.
நீதி நாயகம் சந்துரு அவர்கள் இருளர் என்னும் பாம்பு பிடிக்கும் ஒரு பழங்குடி இனத்தினர்க்கு சாதித்துக் கொடுத்ததை பார் அறிய (பார் : உலகு) சூரியா ஜோதிகா ஞானவேல் குழுவினர் பறை சாற்றி இருக்கின்றனர்.
உண்மையை நிதர்சனமாக கூட்டல் கழித்தல் ஒட்டல் வெட்டல் எல்லாம் இன்றி மிக அழகாக படமாக்கி அனைவரையும் விழிப்புணர்வூட்டி இருக்கின்றனர். உண்மை எப்போதும் கற்பனையை விட வலுவானது.
காவல் துறை உங்கள் நண்பன், தமிழக காவல் துறை உலகின் ஸ்காட்லாண்ட் யார்ட் போல என்பதெல்லாம் எந்தளவு உண்மை எனச் சொல்லப் பட்டு இருக்கிறது...உண்மை என்பதால் யார் கோபமும் அதை எதிர்க்கவும் வழி இல்லை அதே நேரத்தில் நீதித் துறையின் சந்து பொந்துகளிலும் நீதி நாயகம் சந்துரு எந்தளவு புகுந்து வரவேண்டியிருக்கிறது என்றும் பதிவாகி இருக்கிறது.
மணிகண்டன் ராசாக்கண்ணுவாகவும், லிமோஜோஸ்(லிஜோ மோல் ஜோஸ்) செங்கேணியாகவும், சூரியா சந்துருவாகவும் பிரகாஷ்ராஜ் விசாரணை செய்யும் ஐ.ஜியாகவும் வாழ்ந்து காட்டி இருக்கின்றனர். அத்துடன் அந்த காவல்துறை வேடம் ஏற்றிருப்பவர்களும் ...
சுமார் பத்தாண்டு காலம் அடியவனாகிய நானும் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர்க்காகவும் பணிச் சேவை ஆற்றியவன் என்ற முறையில் இந்தப் படத்தைப் பற்றி பதிவு செய்வது எனது கடமையாகிறது.
அப்போது 1995 எனச் சொல்கிறது இந்தப் பதிவு. ஆனால் அதற்கும் முன்பே நான் கல்ராயன் மலைப் பகுதிகளில்
தீர்த்தன் என்ற முடவன் கோவில் சார்ந்தவரின் அரை பவுன் மோதிரத்தை ஏன் காய்ச்சவில்லை கள்ளச் சாராயம் , நீ காய்ச்சினாலும் காய்ச்சாவிட்டாலும் எனக்கு சேர வேண்டிய மாமூல் வந்து விட வேண்டும் என காசில்லாவிட்டாலும் பரவாயில்லை என கைவிரலில் இருந்த மோதிரத்தை பிடுங்கிச் சென்ற தங்க மோதிரத்தை காவலரிடமிருந்து மீட்டுத் தந்தது
சாராயம் காய்ச்சுகிறார் அவர் கிடைக்கவில்லை என ஒருவருடைய மனைவியை குன்னூர் என்ற ஊரில் அடித்து அடைத்து வைத்துக் கொண்டு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்த படி சாராயத்தைக் குடித்துக் கொண்டிருந்த ஒரு தலைமைக் காவலர் இரு காவலர்கள், அவர்களுக்கு வழி காட்ட வந்த இரு ஆத்தூர் செல்லியம்பாளையத்து இளைஞர்கள் குழு எங்களிடம் பாடம் கற்றுச் சென்றது... இது போன்று இன்னும் சில காவல்துறை வெர்சஸ் மலைவாழ் மக்கள், பழங்குடியினர் வாழ்வின் பதிவுகள் என்னுள்ளும் இருந்து அலைபாய்ந்ததால்
அந்தப் படத்தை என்னால் அழாமல் அழுகையை நிறுத்த முயன்றும் முடியாமல் மட்டுமே பார்க்க முடிந்தது... இயல்பான நிஜமான சம்பவங்களை இப்படி திரைவடிவுக்கு கொண்டு வரும்போது மிகுந்த கவனம் பெறுகின்றது மிகுந்த கவனம் கொண்டும் செய்திருக்கிறார்கள்.
சூரியா, ஜோதிகா, சிவகுமார் குடும்பம் மக்கள் பிரச்சனையின் மிக அருகாமைக்கு இடைவெளியை குறைத்து வந்து கொண்டிருக்கிறது என்பதன் அடையாளமே இந்த ஒரு அரிய தமிழ்ப் படம்...இது பல மொழிகளிலும் வெளியிடப்படுவதை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஹெச் ராசா அணுகி அதற்கு ட்வீட் செய்திருக்கிறார் என்ற செய்தியும் இருக்கிறது.
திரைப்படம் 2 நவம்பரில் வெளி வந்துள்ளது, நேற்று 3 அன்றே பார்க்க வாய்த்தது...தயவு செய்து அனைவரும் பார்க்கவும் அரிய அற்புதமான படம்...வழக்கமாக சுவை சேர்ப்பதற்காக மிகவும் கீழே சோகத்துக்காக நாயக நாயகியர்க்கான சம்பவங்களைக் கோர்த்து அதன் பின் கொடூரமாக பழி வாங்குவது போன்ற நியாயம் சொல்லும் படமாக இல்லாமல் மிக நேர்த்தியாக தேவையானவற்றை மட்டும் சொல்லி நெஞ்சை கசக்கிப் பிழிந்து யதார்த்தம் என்றால் என்ன என உணரவைத்திருக்கிறார்கள்...
முதல்வர் ஸ்டாலின் போன்றோரும் இன்னபிற பிரபலங்களும் வாழ்த்தி பாராட்டி இருக்கின்றனர். எனது பதிவும் இதில் சேர்கிறது ஒரு கரம் குவிதலுடன்...
KEEP IT UP SURIYA...80+ /100
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
பி.கு: நானும் சட்டம் பயின்றிருந்தால் சூரியா வேடம் போல, சந்துரு போல ஒரு வழக்கறிஞராக இருந்திருக்கலாம் என அவா கொள்ளும் படமாக இருக்கிறது ஆனாலும் சட்டம் பயிலாமலே அவர்களுக்காக நான் உழைத்திருக்கிறேன் என ஒரு பெருமிதமும் நிம்மதியும் சாந்தியும் மகிழ்வும் இப்போதும் எனக்கு இருக்கிறது.
No comments:
Post a Comment