Saturday, November 19, 2016

செல்லாத ரூபாய்:வீரியம் புரியாமல் அமைதி காக்கிறோம் Posted on 17/11/2016 by செங்கொடி

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் இதுவரை சந்தித்திராத பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். கருப்புப்பணத்தை, கள்ளநோட்டுகளை இந்த நடவடிக்கை ஒழிக்குமா? ஒழிக்காதா? மோடியின் நோக்கம் என்ன? பெருமுதலாளிகள் இதனால் இழந்தது பெற்றது என்ன? அறிவிப்புக்கு முன்னமே பணம் மாற்றிய தகவல்கள் என நாள்தோறும் செய்திகள் மக்களைத் தாக்கி செயலிழக்கச் செய்து கொண்டிருக்கின்றன. செய்தி ஊடகங்கள் முழுக்க முழுக்க மக்களைக் கை கழுவி விட்டு அரசின் ஊது குழலாய் அப்பட்டமாய் மாறி நிற்கின்றன. இணையத்தில் சமூக ஊடகங்கள் மட்டுமே மக்களுக்கான விளக்கங்களை சொல்லிக்  கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தோழர் வில்லவன் எழுதிய இந்தக் கட்டுரை அந்த விளக்கங்களினின்று விலகி யதார்த்தத்தை நேரப்போகும் அபாயத்தை எளிமையாய் மக்களுக்கு புரியவைக்க முயல்கிறது. படித்துப் பாருங்கள்.
money_3079003f

மோடியின் பொருளாதாரக் கலவரம்- முதலிரவோடு கலைந்துபோன மோடி பக்தர்களின் சொப்பன ஸ்கலித சுஹானுபவம்!

மோடி ஆர்ப்பாட்டமாக அறிவித்த ரூபாய் நோட்டு புரட்சி பாமர மக்களை நாடோடிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் மாற்றி தெருவில் நிறுத்தி ஒரு வாரமாகிறது. இளைஞர்களுக்கு ஈவ்டீசிங் செய்ய கற்றுக்கொடுக்கும் சினிமா மக்களுக்கு கருப்புப் பணம் என்றால் என்னவென்றும் கற்றுத்தந்திருக்கிறது. அந்த விழிப்புணர்வின் உச்சபட்ச ஆர்கசத்தில் இருந்த மிடில்கிளாஸ் மக்கள் தமது சொப்பன ஸ்கலித சுகானுபவத்தில் கூச்சலிட்டார்கள். எதிர்ப்பதா ஆதரிப்பதா என குழம்பிய கட்சிகள் மையமாக கருத்து சொல்லின. மோடியின் காலை நக்கும் வாய்ப்புக்கு காத்திருந்த எலைட் குடிகள் அல்லது தம்மை அப்படி கருதிக்கொள்ளும் மனிதர்கள் மோடியை புகழும் ஒரு நல்வாய்ப்பை இறுக பற்றிக்கொண்டார்கள். தந்தி டிவி பாண்டே நள்ளிரவுவரைக்கும் நற்செய்தியளித்தார்.
அன்றிரவு முதல் ஏடிஎம்கள் முற்றுகைக்கு உள்ளாயின. மறுநாள் நாடே 100 ரூபாய்க்கு அல்லாடியது. கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பக்தர்கள் தேசபக்தி வகுப்பெடுப்பதில் பிஸியானார்கள். விவரம் தெரியாமல் பயணித்த மக்கள் குழந்தையின் பாலுக்குக்கூட பணமின்றி தவித்தபோது புதிய இந்தியா பிறந்ததாக பூரித்தார் ரஜினி. சொன்ன கையோடு அந்த குழந்தைக்கு பொம்மை வாங்க வெளிநாட்டுக்கும் பறந்துவிட்டார். அவரது ஆதர்ச நாயகன் மோடியோ பேடிஎம் விளம்பரத்தில் என் மூஞ்சியை பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லாமல் சொல்லிவிட்டு சிங்காரம் குறையா முகத்தோடு ஜப்பான் கிளம்பிவிட்டார்.
அன்று துன்பப்பட்டவர்கள்கூட இது ஓரிரு நாளில் தீர்ந்துவிடும் சங்கடம்தான் என நம்பினார்கள். ஆனால் இந்தியர்கள் நம்பிக்கை ஒருநாளும் உண்மையாவதில்லை. செய்தி வந்த அன்றே வங்கிப் பணியாளர்கள் அச்சமடைந்தார்கள். அந்த அச்சம் வங்கிகள் திறந்தபோது எல்லா மக்களுக்கும் பரவிற்று. பணமிருந்தும் செலவளிக்க இயலாமல் அல்லாடிய மக்களின் கதை மெல்ல சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. அப்போதும் இது ஒரு தற்காலிக பிரச்சினை எனும் பார்வையே இருந்தது. வங்கிகளில் இரண்டாம் நாள் கொடுக்கும் பணத்துக்கு தட்டுப்பாடு வந்தபோதுதான் சிக்கலின் தீவிரம் உறைக்க ஆரம்பித்தது. பல வங்கிகளில் இரண்டாம் நாளே பணம் இல்லை. பணம் இருக்கும் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பணம் தரப்படும் என அறிவித்தன. ஏடிஎம்களில் 2 லட்சத்துக்கு மேல் பணம் வைக்க முடியாது என்பதும் புதிய 2000 ரூபாய் தாள் ஏடிஎம் டிரேயில் பொருந்தாது எனும் தகவல்கள் வந்தன. ஏடிஎம்களை புதிய நோட்டுக்கு தக்கவாறு மேம்படுத்த 100 நாட்களாவது ஆகலாம் எனும் செய்திகளும் எட்டிப்பார்த்தன. புழக்கத்தில் உள்ள 87 சதம் பணத்தை மாற்ற உள்ள பெரிய கட்டமைப்பில் இருக்கும் கோளாறுதான் முதல் எச்சரிக்கையாக அமைந்தது.
இந்த அடிப்படை குறைபாடு குறித்த தகவல்கள் வந்தவுடன் மோடியின் கால் நக்கிகள் பேச்சில் பதற்றம் தென்பட்டது. அறிவிப்பு வந்த முதல் இரவோடு தமக்கு ஏற்பட்ட பரவச உணர்வு இத்தனை சீக்கிரம் தீரும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை, வழமைபோலவே அது ஒரு சுயஇன்ப பரவசம்தான் என அறிந்தபோது பதற்றம் ஆத்திரமாக உருவெடுத்தது. 10 மாதங்களாக திட்டமிடப்பட்டது என பாஜக வட்டாரங்கள் சொல்கின்றன, எனக்கே அரை மணிநேரம் முன்னால்தான் தெரியும் என அருண்ஜெட்லீ சொல்கிறார். அப்படியானால் 10 ஆண்டுகளாக மோடி திட்டமிட்டது யாருடன் எனும் குழப்பம் தோன்றியது. பாஜக ஸ்லீப்பர் செல்கள் மெல்ல நழுவ ஆரம்பித்தன, முட்டுக்கொடுப்பதா விலகி ஓடுவதா எனும் குழப்பம் சமூக ஆர்வலர்களிடமும் பொருளாதார நிபுணர்களிடமும் வெளிப்பட்டது. கலவரம் செய்து நாற்காலியை தக்கவைப்பதுபோல இதையும் ஒருசில நாளில் முடித்து சீன் காட்டிவிடலாம் என நாக்பூர் பெருந்தரகர்கள் எண்ணியிருக்கக்கூடும். ஆனால் அந்த புரிதலில் ஒரு பெரும் பிழை நேர்ந்துவிட்டது என்றே நம்ப வேண்டியிருக்கிறது. சங்கிகளிடம் ஒரு கலவரத்தை ஆரம்பிக்கவும் முடிக்கவும் போதிய ஆள்பலம் இருக்கிறது. அதில் முக்கால் நூற்றாண்டு முன்னனுபவம் இருக்கிறது. ஆனால் ரூபாய் நோட்டு விவகாரம் அப்படியானதல்ல. இந்தியா இதற்குமுன் இப்படியான ஒரு நடவடிக்கை எடுத்த அனுபவமில்லை
இதன் முதல் பேரபாயம் புதிய ரூபாய் நோட்டுக்களின் இருப்பில் இருந்து துவங்குகிறது. பணம் அச்சடிப்பது பிட் நோட்டீஸ் போல இலகுவான பணியல்ல. புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களை மாற்றீடு செய்ய போதுமான அளவு புதிய நோட்டுகள் கையிருப்பு இல்லை. அவை முடிய பல மாதங்கள் ஆகலாம். அதனால்தான் மை வைப்பது, ஆதார் அட்டை கேட்பது என பல குறுக்கு யோசனைகள் படையெடுக்கின்றன. இப்படியான அறிவிப்புக்கள் நாள்தோறும்கூட வரலாம். ரிசர்வ் வங்கியின் பணம் அச்சிடும் திறனுக்கும் நாட்டின் இன்றைய தேவைக்கும் பாரிய இடைவெளி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இது சரியாக மே மாதம் வரை ஆகலாம் என செய்தி வாசிக்கிறது கலைஞர் டிவி. சில ஊடகங்கள் 4 மாதம் ஆகும் என்கின்றன.
இப்போது வங்கிகளில் செலுத்தப்படும் பணத்தில் பெரும்பங்கு தினசரி தொழிலுக்கான முதலீடு அல்லது உடனடி தேவைக்கான கையிருப்பு அல்லது சேமிப்பு. இப்போது தரப்படும் 4500 பணம் கைச்செலவுக்கானது மட்டுமே. ஏடிஎம்கள் சர்வ நிச்சயமாக முழுமையாக செயல்படப்போவதில்லை. மக்களிடம் பணத்துக்கான தேவை சில நாட்களில் உருவாகையில் வங்கிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். மக்கள் பல செலவீனங்களை ஒத்தி வைக்கிறார்கள் (வாடகை, மளிகை பாக்கி ஆகியவை) இது நீண்ட நாட்களுக்கு சாத்தியமல்ல. டிசம்பர் முதல் வாரத்தில் இந்த நெருக்கடி இன்னும் தீவிரமடையும். பணமாக ஊதியம் கொடுக்கும் நிறுவனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவையும் வங்கிகளை விரைவில் நெருக்க ஆரம்பிக்கும்.
இப்போதே சிறுவணிகர்கள் வியாபாரம் 75% சதவிகிதம் பாதிக்கப்பட்டுவிட்டது. கிருட்டினகிரியில் விவசாயிகள் விளைபொருளுக்கு உரிய விலை இல்லை. இது கிட்டத்தட்ட பாமர மக்களுக்கான ஒரு கலவரச்சூழல். காரணம் இங்கு வங்கியில் முடங்குவது அவர்கள் சேமிப்பல்ல மாறாக அவர்கள் தினசரி வாழ்வுக்கான முதலீடு. இதனை எத்தனை நாட்களுக்கு அவர்கள் தாங்குவார்கள்?
பண இருப்பு குறைகையில் அடிவாங்கும் அடுத்த தொழில் கட்டுமானம். அதில் பெருமளவு பணம் கைமாறுவது வங்கி பரிமாற்றமாக அல்ல. வங்கிக்கடனில் வீடு கட்டுவோரும் நகைகளை அடகுவைப்பது கைமாத்து வாங்குவது சேமிப்பை உடைப்பது என பல நடவடிக்கைகளை மேற்கொண்டே அதனை முடிக்கிறார்கள். இந்த சாதாரண வங்கி நடவடிக்கைகள் கொஞ்ச நாளுக்கு மிகவும் சிரமப்படுத்தக்கூடியவை. இதில் தொடர்புடைய பல துறைகள் பணமாக மட்டுமே வியாபாரம் செய்யக்கூடியவை. ஆகவே கட்டுமானம் முற்றாக முடங்கும். அது சார்ந்த தொழிலாளிகள் வேலையிழப்பார்கள்.
இதன் வேறுவகையான அவலத்தை வங்கி ஊழியர்கள் எதிர்கொள்கிறார்கள். கற்பனைக்கெட்டாத அளவுக்கு பரிவர்த்தனைகளும் குழப்பங்களும் அவர்களை மூச்சுத்தினற வைக்கின்றன. மோடியிடமும் ஜெட்லியிடமும் கேட்கவேண்டிய கேள்விகளை வங்கி காசாளர் எதிர்கொள்கிறார். பணம் கையிருப்பு இல்லாமல் பதில் சொல்லி சலித்துப்போகிறார்கள் அவர்கள். வங்கிகள் பெரும் ஆள்பற்றாக்குறையில் இயங்குகின்றன. இனி வரப்போகும் ரூபாய் நோட்டு நெருக்கடி அவர்களைத்தான் நேரடியாக தாக்கும். இடையே மை வை, நாமம் போடு என அரசு புதிய கடமைகளை திணிக்கிறது. நான் பேசியவரை அவர்கள் கடுமையான மன அழுத்தத்திலும் களைப்பிலும் இருப்பது தெரிகிறது. வங்கிகளுக்கு இனி 100 மற்றும் அதற்கு குறைவான ரூபாய்கள் சில மாதங்களுக்கு மக்களிடமிருந்து வராது. நாடு முழுக்க இருக்கும் வங்கிகளுக்கு பணம் சப்ளை நடந்துகொண்டே இருக்க வேண்டும். வழக்கமான வங்கிப்பணிகள் எப்போது ஆரம்பிக்கும் என்பதும் தெரியவில்லை. அதற்கான திட்டங்கள் என்ன என்பதும் தெரியவில்லை.
சுற்றுலாத்துறை முதல் கோயில்கள் வரை வருமானக்குறைவை சந்திக்கவிருக்கின்றன.
கிராமங்களின் கதி என்னவாகும் என தெரியவில்லை. இப்போதே கூட்டுறவு வங்கிகளை அரசு கைகழுவிவிட்டது. கூலி வியாபாரம் என இரண்டு பக்கமும் ரொக்கத் தேவையுள்ள விவசாயம் பற்றி இப்போதைக்கு கவலைப்படக்கூட ஆளில்லை.
வங்கிகளின் கையிருப்பு அதிகமாவதால் அதனை கார்ப்பரேட்டுக்களுக்கு கடனாக கொடுப்பார்கள். சேமிப்புக்கான வட்டி குறைக்கப்படும். முதியோர் பாதுகாப்புக்கு எந்த திட்டமும் இல்லாத இந்தியாவில் முதியோர் தன்மானத்தோடு வாழ்வது அவர்களது சேமிப்பை நம்பியே. விளம்பரத்தால் வாழும் ஒரு கிழவனால் எண்ணற்ற முதியவர்கள் தங்கள் ஓய்வுகால வருமானத்தை இழக்கவிருக்கிறார்கள். ஆனால் பெரு நிறுவனங்கள் இதன் சாதகங்களை மட்டும் அனுபவிக்கவிருக்கின்றன. இப்போதே ஸ்டேட் வங்கி மல்லையா உள்ளிட்ட கார்ப்பரேட்டுக்களின் கடன் 7000 கோடியை தள்ளுபடி செய்திருக்கின்றன. பேரங்காடிகள், பேடிஎம் வகையறாக்கள் எல்லாம் பெரும் லாபத்தில் திளைக்கிறார்கள்.
சற்றேறக்குறைய 99 சதவிகிதம் மக்களை நிர்மூலமாக்கும் எல்லா தகுதியும் கொண்ட ஒரு பெரும் தாக்குதலை மோடி தொடுத்திருக்கிறார். இதைவிட மென்மையாக இந்த சர்வாதிகாரத்தை கண்டிக்க முடியாதும் எனும் அளவில் ஊடகங்கள் இதனை கையாள்கின்றன. இப்படியான ஒரு ரூபாய் நோட்டு தட்டுப்பாடு இதற்கு முன்னால் எந்த நாட்டிலும் வந்திருப்பதாக தெரியவில்லை. இதன் பின்விளைவுகள் அனுமானிக்க முடியாதை, அவை நல்லவையாக இருக்க இயலாது என்பது நிச்சயம். இந்தியா ஒரு பெரும் பொருளாதார பேரழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதன் வீரியம் புரியாமல் நாம் அமைதி காக்கிறோம்.
 thanks: Sengodi and Villavan

marubadiyumpookkum varai
Kavignar Thanigai.

No comments:

Post a Comment