Monday, November 11, 2024

இரத்தினம் ஓவிய(ம்) ஆசிரியர்: கவிஞர் தணிகை

 இரத்தினம் ஓவிய(ம்) ஆசிரியர்: கவிஞர் தணிகை



நடைப் பயிற்சியின் போது கருப்பு ரெட்டியூர் புறவழிச் சாலை சந்திப்பில் உள்ள கடைகளின் வாயிலில் அவர் அமர்ந்திருக்க, வணங்கினேன். மனிதர் அப்படியே அப்போது பார்த்தது போலவே இருக்கிறார். சிலருக்குத்தான் அப்படிப்பட்ட தேகம்.உயரமும் இல்லை,தொப்பை தொந்தியும் குண்டாகவும் இல்லை.


நாம் தாம் நரை நிறைந்திருக்க,முதியவராய் நிற்கிறோம் அவரது மாணவராக இருந்தும்.


ஓவியம் கற்றுத் தரச் சொன்னால், கடல் புறாவையும், யவன ராணியையும் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி நமையெல்லாம் கற்பனையை நடப்பதைப் பார்ப்பதைப் போல செய்து விட்டார். சரித்திரக் கதைகளை எல்லாம் ஒரு கை பார்த்து விட வேண்டும் என ஆர்வத்தை ஊட்டி விட்டார்.


பேரும் இரத்தினம், அதே வடிவத்தில் குள்ள உருவம் வெற்றிலை போட்ட வாயில் சிரித்த இதழ்கள், கண்ணில் கண்ணாடி, அதே இரு சக்கர வாகனம்...நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். மனிதர் நீடூழி வாழ யாம் எல்லா வல்ல இயற்கையை பிரார்த்திக்கிறோம்.


தணிகை என்ற கூடையுள் நிரம்பிய மலர்களுள் இவருடைய இரு கை நிரப்பி இட்ட‌ மலர்களும் உள்ளன.


இரு கை கூப்பிய வணக்கங்களுடன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Thursday, October 31, 2024

தீப ஒளி சிறப்புச் செய்தி: கவிஞர் தணிகை

 தீப ஒளி சிறப்புச் செய்தி: கவிஞர் தணிகை



எந்த திட்டமானாலும் அதை மிகவும் நேர்மையாக பார பட்சமின்றி ஒரு தலைப் பட்சமின்றி தெளிவுடன், தூய்மையுடன் கண்டிப்புடன் இரும்புக் கரம் என்று சொன்னாலும் சரி என்று நிறைவேற்றுகிற தலைமையை ஊக்குவிக்க வேண்டும்.

DEEPA VALI...

1. குடும்பத்துக்கு அல்லது வீட்டுக்கு ஒரு மத்திய அரசுப் பணி அல்லது மாநில அரசுப் பணி ஏதாவது ஒன்று ஒருவர்க்கு மட்டும் இருந்தால் போதும். பொருளாதாரம் செழிக்கும். ( தகுதிகளுக்கேற்ப அல்லது படித்த கல்விப் படிப்புக்கு ஏற்ப)


2. அதனால் இலவசங்கள் குறைக்கப் பட்டு அரசுக்கு செலவினங்களை மடை மாற்றம் செய்து கல்வி, மருத்துவம் போன்றவற்றை இலவசமாக்கலாம்.


3. இதைப் பற்றிய புள்ளி விவரங்கள் அல்லது தரவுகள் அரசிடம் அதன் துறைகளிடம் ஏற்கெனவே நிரம்ப உள்ளன அதை வெகுவாகப் பயன்படுத்தலாம்.


4. வருவாய்த் துறை,பதிவுத் துறை, மின் துறை போன்ற எல்லாத் துறைகளிலும் தினக்கூலி அல்லது தற்காலிகப் பணியாளர்கள் சிறு வருவாயுடன் பணி செய்து வருகின்றனர் பல ஆண்டுகளாக‌ அவர்கள் எல்லாம் கணக்கில் எடுக்கப் பட்டு  குடும்ப பராமரிப்புக்காக போதுமான அளவு ஊதியம் நிரந்தரம் செய்ய வேண்டும்.அடிமட்ட அளவில் பணி புரிகின்ற அவர்கள் எல்லாம் அரசுப் பணியில் இருக்கின்றனர் ஆனால் அரசுப் பணியில் நிரந்தர ஊதியத்துடன் இல்லை.


5. நதி நீர் இணைப்பு பொருளாதரத்தின் ஒரு திறவு கோல் . அதற்கு காலாட் படை, விமானப் படை, கப்பற்படை பயன்படுத்தப் படலாம். அதற்கான ஆள் சேர்ப்பு இன்றைய வேலையில்லா இளைஞர்களுக்காய் இருக்கலாம்.


6. நாட்டின் கவனத்துக்குரிய பிரபலமான தலைமைப் பொறுப்பில் உள்ளார் கூட ஓய்வு பெற்ற பின் மீண்டும் பணிக்கோ பொறுப்புக்கோ, பதவிக்கோ ஆசைப்பட்டு தங்களது பணி வாய்ப்பை பதவி வாய்ப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்கலாம்.


7.எந்த திட்டமானாலும் அதை மிகவும் நேர்மையாக பார பட்சமின்றி ஒரு தலைப் பட்சமின்றி தெளிவுடன், தூய்மையுடன் கண்டிப்புடன் இரும்புக் கரம் என்று சொன்னாலும் சரி என்று நிறைவேற்றுகிற தலைமையை ஊக்குவிக்க வேண்டும்.


8. ஆபத்தான  தொழில், பட்டாசு தயாரித்தல்,போன்ற தொழில்களை எல்லாம் செய்ய அறிவியல் செயற்கை ம நுண்ணறிவு, தானியங்கி ரோபோக்கள் பயன்படுத்தல் அல்லது அந்த தொழில்களை மடை மாற்றம் செய்ய வேண்டும். அந்த தொழிலாளர் வாழ்வை மேம்படுத்த வேண்டி மாற்றுத் தொழில்களை ஏற்படுத்தி தரல் வேண்டும் அல்லது வாழ்வின் உத்தரவாதமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அரசு உறு துணை புரிய வேண்டும் (உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் கல்வி)

இப்படி பலப் பல...இந்தியா வல்லரசாக நல்லரசாக...கலாம் கண்ட கனவுகளுடன் உள்ளன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


பி.கு: இங்கு நேர்மறை எண்ணங்களுடன் மட்டுமே கருத்துகள் வைக்கப் பட்டுள்ளன.



Monday, October 21, 2024

எல்லாந் தெரியு(மு)ங்க: கவிஞர் தணிகை

 எல்லாந் தெரியு(மு)ங்க: கவிஞர் தணிகை



நண்பர் 70 நெருங்கி வருகிறார்,அவரும் அடியேனும் தவறாமல் நடைப் பயிற்சியில்.அவர் ஒரு முன்னால் இராணுவ வீரர், இந்திய அமைதிப் படையில் இலங்கையில் கூட இரண்டாண்டு பணியில் இருந்தவர்.அவரும் அடியேனும் நடைப் பயிற்சியில் அவர் சாலையின் இடப் புறமும் அடியேன் வலப்புறமும் நடை பயில்கிறோம் செல்லும் போது.அது போக்குவரத்துக்கு சுலபமாக இருக்கட்டுமே என்று.


 அது பார்ப்பவர்க்கு வித்தியாசமாக இருக்கிறது போலும்.என்னிடம் நேற்று ஒரு மகிழுந்து ஓட்டிய இளைஞர் எதிரில் வந்தவர் , அந்தப் பக்கம் போங்கள், சாலையில் தவறான பக்கத்தில் செல்கிறீர் என்றார் அடியேனை. இதுதான் சரியான முறை சாலை விதியும் கூட என்றேன்.


 வாகனங்களுக்கு இந்திய சாலை விதி இடது பக்கம் செல்லச் சொல்லி இருக்க, பாதசாரிகளுக்கு வலது பக்கம் செல்லவே சொல்லி இருக்கிறது அதை பள்ளிகளில் முதலில் பிள்ளைகளுக்கு படிப்பிக்க வேண்டும். எவருமே இதைக் கடைப் பிடிப்பதில்லை.கண் பார்வைக்கு பார்வை தொடர எதிரே வரும் வாகனமும் நடப்பாரும் எளிதாக மோதிக் கொள்ளாமல் (எவராவது ஒருவர்) விலகிச் செல்ல முடியும் எனவேதான் இந்த ஏற்பாடு. இது விபத்தை தவிர்க்க.துவிசக்கர வண்டிகளும், பாதசாரிகளையும் பார்ப்பதே இப்போது சாலையில் அரிதாகிய சூழலில் இதை நான் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.


இவ்வளவு ஏன் பீடிகை என்றால், இந்த நாட்டில் மக்கள் எல்லாமே விதிக்கு மேம்பட்ட வாழ்வே வாழ்கிறார்.அல்லது விதியை, சட்டத்தை, நீதியை, தர்மத்தை , இயற்கையை, இயல்பை மீறியபடியே வாழ்ந்து கொண்டு வருகிறார் சுய நலம் என்ற ஒரே போக்கில்.எல்லாமே தனிப்போக்குவரத்துக்கு தாவியுள்ள காலம் பொதுப் போக்குவரத்து ஏழைக்கென ஒதுக்கப் பட்டது போல நினைக்கிறார்கள்.


அவர்கள் எதையுமே கடைப் பிடிப்பதில்லை.காரணம் பலப் பல. அவற்றை எல்லாவற்றையுமே இங்கு சொல்ல அவா இல்லை. ஒரு புறம் அரசே மக்களை தவறு செய்ய நிர்பந்திக்கிறதோ என்ற கேள்விகளும் உள்ளன. அவை எல்லாம் வேறு.


பல் விளக்கத் தெரியுமா? தெரியுமே, வெளிக்குப் போய்ட்டு கால் கழுவத் தெரியுமா? அடச் சீ இந்த ஆளுக்கு வேறு வேலை இல்லை, இதை எல்லாம் போய் பேசிக் கொண்டு இருக்கிறார் பார், இதெல்லாம் தெரியாதா? குளிக்கத் தெரியுமா? இதெல்லாம் தெரியாமலா இருப்பார்கள்? வாய் சுத்தம், ஆசன வாய் சுத்தம், குளித்தல் குளிர்வித்தல் எல்லாம் நாடி சுத்தி பாடங்கள், நாடி சுத்தி, கபால‌ பாத்தி என இருவகை மூச்சு பயிற்சி செய்வார்க்கும் சுவாசக்  குழல்/மூச்சுக் குழல் சுத்தம் செய்யப் படுகிறதாம் தெரியுமா? யோவ் வேற வேலை இல்லையா போய்ப் பார்,சுவாசிப்பது இருப்பது மனிதர் உயிரோடு இருப்பது வரை இயல்பாக இருப்பது, இதை எல்லாம் போய் கவனித்து வர வேற வேலையா இல்லை? என்பார்க்கு இந்தப் பதிவு அவசியமில்லை.


இங்கு எதுவுமே தெரியாமல், புரியாமல், உணராமல் மனிதப் பயணங்கள் நிகழ்ந்தபடி உள்ளன. எனது நண்பர்கள் சிலர் தினம் ஒரு திருக்குறள் தருகிறார்கள், சிலர் புதிய முயற்சி செய்கிறார்கள். பாராட்டுகள். எவ்வளவு பேர் ஒரே ஒரு குறளையாவது பின்பற்றி வாழத் தலைப்படுகிறார் என்பதுவே கேள்வி.அல்லது அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை இளந்தலைமுறையிடம் ஏற்படுத்த விழைகிறார் அவர் தம் வாழ்வை அதற்கு  முன் மாதிரியாக வாழ்ந்து காட்டுகிறார் என்பதுவே கேள்வி.


சட்டமும், நீதியும், ஏட்டிலும், எழுத்திலும், பேச்சிலும் இருக்கின்றன அனைவரும் சமம் சட்டத்தின் முன் எனச் சொல்லும் (அப்படி எல்லாம் இல்லை என்பது வேறு) இந்திய தாய்த் திரு நாட்டில் எவருக்குமே எதைப்  பற்றியுமே அதற்கு எதிராக செயல்படுவது பற்றிய சிந்தனை மாற்றம் பற்றிய துளி சுய உணர்வு கூட பாதிப்பாகத் தெரியவில்லை. அல்லது அதெல்லாம் பாத்தா வாழ முடியுமா என்கிறார்கள் அதிகம். நடை முறை பற்றியே இங்கு சொல்லப் புகுந்தேன். அது வேறு வேறு பொருள் பொதிந்ததாய்த் தெரிந்தால் வாழ்வின் நடைமுறைப் பற்றி எல்லாம் குறிக்கிறது என்றால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Wednesday, October 16, 2024

அளவுக்கு மிஞ்சினால்...கவிஞர் தணிகை.

 சிறுவர் சிறுமியர்க்கு நத்தையும் அட்டையும் வேடிக்கை வியப்பு

இருபதுகளில் இரசிப்பு ( 1980கள்)

அறுபதுகளில் தொல்லை ( 2025களில்)



அளவுக்கு மிஞ்சினால்...



சொல்ல வந்தது யாரையும் எந்த அமைப்பையும் குறித்தல்ல...

அப்பட்டமான இயற்கையின் இயல்பை...



 தம் வீட்டு குப்பையை சாலைக்கு அப்புறம் கடந்து வந்து அடுத்தவர் நிலத்தில் வீசி விட்டு செல்லும் வயதான விதவைப் பெண் சொல்கிறார் தம் வீட்டு சுவர் மேல் ஊர்வதன் மேல் எல்லாம் உப்புத் தூள் வீசி விடுகிறாராம் அவை கசங்கி சித்திரவதைப் பட்டு மடிகிறதாம்...இரசாயன ஆய்தம்...கெமிகல் வெப்பன் யூஸ்ட் பை எ நார்மல் லேடி. லேடி வித் கெமிகல் வெப்பன்....OLD LADY WITH CHEMICAL WEAPON...Just for a Joke....☺☺



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.







Wednesday, October 2, 2024

கண்ணாடி பார்க்காத மனிதன்: கவிஞர் தணிகை

 கண்ணாடி பார்க்காத மனிதன்: கவிஞர் தணிகை



முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்க்காத மனிதன்

எல்லா நீர் வீழ்ச்சிகளையும் விட மழையே அதிக உயரத்தில் இருந்து வீழ்வதால் அருகிருந்தும் நீர் வீழ்ச்சியைக் கூட பார்வையிடச் செல்ல அழைத்த அழைப்பை ஏற்கா மனிதன்.


நேரந் தவறாமையைக் கடைசி வரைக் கடைப் பிடித்தவன்

காய் கறி நறுக்கி சமையல் செய்ய சமையல் கலை தெரிந்தவன்


திடக் கழிவு மேலாண்மையைக் கடைப் பிடிக்க கற்றுத் தந்தவன்

கூனே முறை என்று ஆண்குறியை நீரில் வைத்து பிரமசாரிய விரதப் பயிற்சி மேற்கொண்டவன்

மண் சிகிச்சை, நெற்றி செம்மண் பட்டை எல்லாம் அவனறிவான்


செருப்பு அல்லது காலணியைத் தைக்க தெரிந்து பயிற்சி பெற்றவன்

எவருக்கும் தலை வணங்காமல் தம் கருத்தை இறுகப் பற்றி சிறை செல்லத் தெரிந்தவன்


உண்ணும் உணவில் காரம், மசாலைப் பொருட்கள்,அதிக உப்பு, இனிப்பு இவை யாவும் விலக்கப் படவேண்டியவை என்றே அன்றே அவன் வாழ்வின் முறை மூலம் உணர்த்தியவன்

தமது பணிகளான, முடி திருத்தம், துணி  துவைத்தல், கழிப்பறை சுத்தம் செய்தல் யாவும் செய்தவன்

தாம் இருக்கும் கூட்டுப் பண்ணை முறைகள், மற்றும் தொழில் வளாகத்தில், தங்கும் இடத்தில்

பலரையும் இணைத்து அந்த வாழ்க்கை வாழச் செய்தவன்


ஆயுள் காப்புறுதி வாழும் மனிதர்க்கு அவசியமில்லை என ஏற்க முனைந்தவன்

அவனை தொடர்வார் எவருக்குமே நிரந்தர சொத்து ஏதுமில்லை என்ற வாழ்க்கைப் பாதையைக் கடைப் பிடிக்க‌

உறுதி ஏற்கச் செய்தவன்


பிச்சையிடல் மறுக்கப் பட வேண்டியது என்ற கொள்கையை கொண்டுவர முயன்றவன்

உலகம் எல்லாம் நல் வாழ்வும் வளமும் செழிக்க ஒவ்வொரு நிமிடமும் நொடியும் தமது ஆயுளை அர்ப்பணித்த காமுகனாய் இருந்து அதிலிருந்து மீண்டு காமம் இன்பத்திற்காக‌, இனவிருத்திக்காக, அதிலிருந்து மீட்சி பிரமசாரியம் என்ற மூன்று நிலை மனிதர்க்கு அவசியம் என்று தமது வாழ்வே தமது சுய பரிசோதனைகளே தமது வாழ்வின் பயண வழி காட்டி என்று உயர்ந்த‌ சிறுவன்


ஒளிவு மறைவு அற்ற வெளிப்படைத் தன்மையைக் கடைப் பிடித்து விமர்சனங்களால் நிறைந்து போனவன்

உலகத்துக்கு அதிகம் எழுத்துகளை சுமார் ஒரு இலட்சம் பக்கங்கள் எழுதிக் கொடுத்தவன் , வாழ்வின் முறைகளை ஏந்தியவன்,


இருகைகளிலும் எழுதத் தெரிந்தவன்

தன் குருநாதர்கள் மூலம் தமிழ் தான் சத்தியம் , அஹிம்சை போன்ற தெய்வாம்சத்திற்கு மூலமாய் இருக்கிறது என அறிந்து  தமிழைக் கற்றுக் கொண்டவன், தமிழகம் வந்து ஆடையைக் குறைத்துக் கொண்டு தானும் ஒரு சாமனியனே என அறிவித்துக் கொண்டவன்.


ஒரு கைத்தடியும் அவன் வளைந்து போன கண்ணாடியுமே அவனது அடையாளமாய் உலகெலாம் தெரிந்தவன்.

அவன் மனிதனின் உச்சம், இன்று ஏதுமில்லை அவனின் மிச்சம், இங்கு வளர்பவை யாவுமே எச்சம்.எனது தந்தைக்கு நான் எழுதிய ஒரு மடல் நினைவுச் சேர்க்கை இது.


ஒரு நாள் விடுமுறை, மதுக் கடைகள் மூடல்

மகாத்மியம் வீழ, உலகெலாம் அதன் மாறுபாட்டு எதிர் வினையாவும் மீற...


நல்லவை எப்போதும் தோத்துக் கொண்டே இருந்தால் அதற்குத்தான் என்ன மதிப்பு?


ஓ என் கடவுளே!


*************************************************************

எத்தனையோ

தேவதைகளை எடுத்து விழுங்கி விட்டு

 ஏப்பம் விடாமல்

இன்னும்

ஏங்கி நிற்கிறது


கண்ணாடி...


 .....எப்போதோ கவிஞர் தணிகை


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Saturday, September 28, 2024

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா: கவிஞர் தணிகை

 திருப்பதி ஏழுமலை வெங்கடேசா: கவிஞர் தணிகை



 பல்லாண்டுகளுக்கும் முன்பு நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க அவருடன் திருப்பதி சென்றேன். இலவச விடுதி என்றார்கள் குறிப்பிட்ட தொகையை இருப்புத் தொகையாக வாங்கிக் கொண்டு.திரும்பி அறையைக் காலி செய்து கொண்டு வரும்போது சில்லறை நோட்டுகளாக கொடுத்து அதை அவர்களுக்கே கட்டணம் செலுத்தும் இடத்தில் வாங்கிக் கொள்ள நிர்பந்தம் செய்தார்கள்.( தூய்மையாக ஏதும் அப்போது இருந்ததாக எனக்கு நினைவில்லை அறை வசதிகள்தாம்).


எனக்குத் தெரிந்த தெலுங்கு மொழியில் பேசி எதற்கு உங்களுக்குத் தரவேண்டும்? இலவசம் என்றுதானே சொல்லப் பட்டுள்ளது என்று மள மள வென்று காசு தராமலேயே வெளியேறிவிட்டேன் கூட்டமும், வரிசையில் நின்றவர்களும் காட்சிப் பொருளாக எனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆட்டு மந்தைக் கூட்டத்தில் இருந்து வெளியேறி தப்பிப்பது போல.


எங்கே பின்னால் தொடர்ந்து வந்து விடுவார்களோ ஆள் பலத்துடன் என்ற சந்தேகம் வேறு எனை அப்போது தொற்றி இருந்ததை சற்று தொலைவு வந்தவுடன் கழட்டிப் போட்டேன்.


இருள் பிரமை


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Thursday, September 26, 2024

இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் ஏழு

 இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் ஏழு



ஊர் பெரிய ஊர்தான். சாதி பாகுபாடு உள்ள ஊர்தான். ஆனால் பொது என்று வந்து விட்டால் எவரும் எதையுமே கண்டு கொள்ள மாட்டார்கள்.


அந்த ஊருக்கு என்று ஒரு கிளை பகுதி நேர அஞ்சலகம் இருந்ததும்.இருப்பதுமான செய்திகள் இன்றும் உண்டுஆனால் பெரிய அளவில் வரவு செலவெல்லாம் இருப்பதாகச் சொல்ல வழி இல்லை. ஏதாவது முக்கியமாக கேட்டால் சில கிலோமீட்டர் தள்ளி முக்கிய தபால் குறியீட்டு எண் உள்ள தபால் அலுவலகங்களையே நாட வேண்டும்.


ஆனால் அங்கு அந்த அஞ்சலகத்தில் தவிர‌ வேறு எங்கும் அப்போது அஞ்சல் பெட்டி கிடையாது. கால நேரத்தை தவற விட்டால் முக்கிய நகர் வழிச் சாலை தாண்டி அந்த தனியார் கம்பெனி வாசலில் மட்டுமே மதியம் 3.30 மணி சுமாருக்கு தபால்கள் எடுக்கப் படும் .


அவன் இவ்வளவு பெரிய ஊரின் மக்களுக்காக ஒரு தபால் பெட்டியை வைக்கக் கூடாதா என்று அஞ்சலக அலுவலகங்களில் முறையிட்டு கோரிக்கை செய்து தபால் பெட்டியை வரவழைத்து வைக்கச் செய்தான். அதில் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பேரில் பட்டாசை உள்ளே போட்டு அதன் வாயைக் கிழித்து விட்டார்கள்.


அதன் பின் அதை வேறு இடத்திற்கும் மாற்றி செயல் பட வைத்தான். அதெல்லாம் மின்னஞ்சல் இல்லா அந்தக் காலம் அதெல்லாம் கூரியர் சேவை , ஆன்லைன் சேவை எல்லாம் இல்லா அந்தக் காலம்.


காலம் புவியின் வேகத்தை விட அதிக வேகமெடுத்தபடி சென்று கொண்டே இருக்கிறது...பூமியின் வேகம் நொடிக்கு சுமார் 30 கி.மீ என்கிறார்கள்... தன்னைத் தானே சுற்றும் வேகம்  நொடிக்கு (460மீட்டர்)சுமார் அரை கி.மீ என்கிறார்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

பி.கு: பின் பக்கம் அரைக்கால் சட்டை தேய்ந்து ஓட்டையாக இருக்கும் குந்து புறம் தெரியும் சிறுவர்களை போஸ்ட் பாக்ஸ் என்பார்கள் கேலியாக. அப்படிப் பட்ட அரைக்கால் சட்டைகளை அவனும் அணிந்ததுண்டு.