Sunday, March 23, 2025

நானெல்லாம் 64 வது வயதின் முதல் நாளில் அடி எடுத்து வைப்பதெல்லாம் பெரிசுதாங்க:கவிஞர் தணிகை

 நானெல்லாம் 64 வது வயதின் முதல் நாளில் அடி எடுத்து வைப்பதெல்லாம் பெரிசுதாங்க:கவிஞர் தணிகை



இன்று உங்களுக்கு நான் தரும் செய்தி:



பிள்ளைகளை கைவிடும் பெற்றோரால் சமூக அவலம்.பெற்றாரை கைவிடும் பிள்ளைகளால் கேவலம். அது அல்லது அவை போக வேண்டுமெனில் அதைப் போக்க வெண்டுமெனில் பெற்றோர் தமரது கடமையை சரிவர செய்வதும், தமரது குடும்பத்தை சீராக்குவதுமே நாட்டை நலம் பெறச் செய்யும். குற்றம் குறைய வழி வகுக்கும். அரசியல், ஆட்சி, இவற்றை தவிர்த்து இது சொல்லப் பட வேண்டிய முக்கிய செய்தியாகிறது.  இதையே எனது தலைவரில் ஒருவர் நல்ல ஆசிரியர், நல்ல பெற்றோர், நல்ல பிள்ளைகளே நல்ல சமுதாயத்தை அமைக்க முடியும் என்றதை இன்று நினைவு கூர்கிறேன்.

6 பெண்களை அடுத்து ஆண் பிறப்பு. அதற்காக என்னிடம் ஆலோசனை பெற்ற ரா.மாணிக்கம் நேற்று மறைவு/

என்னடா பிறந்த நாளையும் இறந்த நாளையும் இணைக்கிறேன் என்று பார்க்கிறீர்களா? ஆம். இன்று பகத் சிங் நினைவு நாள். எனது பிறந்த நாளின் நினைவு நாள்.

ஒரு வெள்ளியின் விடியலில் பிறந்தேனாம். ஒரு எளியன், ஒரு அரியன், நிறைய பேருக்கு விடி வெள்ளியானேன்

எனக்குத் திருப்திதான்.நிறைவுதான். இன்னும் இருவருக்கு மட்டுமே செய்ய வேண்டிய கடமை தொடர்கிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Friday, March 21, 2025

சர்வதேச விண்வெளி நிலையத்தைச் செயலிழக்கச் செய்யும் பணிகள்

 thanks BBC Tamil

சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் மேற்பரப்பில் இருந்து வெறும் 415 கி.மீ உயரத்தில் சுற்றி வருகிறதுசுனிதா வில்லியம்ஸ் கடந்த ஒன்பது மாதங்களாகத் தங்கியிருந்த சர்வதேச விண்வெளி நிலையம், 2031ஆம் ஆண்டில் தனது பணியை நிறைவு செய்கிறது.

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) 1998இல் தொடங்கப்பட்டதில் இருந்து, விண்வெளித் துறையில் முன்னேற்றத்தின் ஓர் அடையாளமாக இருந்து வருகிறது.

பூமியில் இருந்து சுமார் 400 - 415கி.மீ உயரத்தில் அமைந்திருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம், 109 மீட்டர் நீளம் (ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு) மற்றும் நான்கு லட்சம் கிலோவுக்கும் அதிகமான எடை (400 டன், ஏறக்குறைய 80 ஆப்பிரிக்க யானைகளுக்கு நிகரான எடை) கொண்டது. இது 1998 முதல் 2011 வரை கட்டமைக்கப்பட்டது.

நாற்பதுக்கும் அதிகமான விண்வெளித் திட்டங்கள் மூலம் பூமியில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, அவை விண்வெளியில் ஒன்று சேர்க்கப்பட்டன. அப்படியிருக்க, இந்தப் பிரமாண்டமான விண்வெளி நிலையம் செயலிழந்தால் என்ன ஆகும்?விண்வெளி நிலையம் பூமியின் தாழ் வட்டப்பாதையில் (Low earth orbit - பூமியிலிருந்து 160-2000 கிமீ வரையிலான உயரம்), அதுவும் பூமியின் மேற்பரப்பிலிருந்து வெறும் 415 கி.மீ உயரத்தில் சுற்றி வருகிறது. அப்படி இருக்கு

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஓய்வு அளிக்கப்படுவது ஏன்?

சர்வதேச விண்வெளி நிலையம், மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பயணிக்கிறது. அதாவது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது.

இத்தகைய வேகத்தில் சுற்றும் ஒரு பிரமாண்ட கட்டமைப்பு திடீரென கட்டுப்பாடின்றி, பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்வதே அச்சமூட்டுவதாக இருக்கும்.

ஆனால், அப்படி ஒரு ஆபத்தான சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே 2031இல், சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளை நிறுத்த நாசா முடிவு செய்துள்ளது.

அதற்குக் காரணம் மிகவும் எளிமையானது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வயதாகிவிட்டது.

ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்து கூட்டாக இந்த விண்வெளி நிலையத்தை 1998இல் கட்டமைத்தன. பிறகு பல்வேறு கட்டங்களாக அது மேம்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் 15 ஆண்டுகள் செயல்படுவதற்காகவே இது வடிவமைக்கப்பட்டது.

இருப்பினும், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் விண்வெளித் துறையின் சர்வதேச கூட்டு முயற்சியில் அதன் தொடர்ச்சியான வெற்றி காரணமாக, விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.

இறுதியாக, முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகத்தில் (2021ஆம் ஆண்டு) இந்த விண்வெளி நிலையத்தின் ஆயுளை 2030 வரை நீட்டிப்பதாக முடிவு செய்யப்பட்டது.

2021) இந்த விண்வெளி நிலையம் தொடர்பாக ரஷ்யாவில் இருந்து ஓர் எச்சரிக்கை வெளியானது. காலாவதியான கருவிகள், வன்பொருள்கள் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சரிசெய்ய முடியாத கோளாறுகள் ஏற்படலாம் என்பதே அந்த எச்சரிக்கை.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷ்ய பகுதியில் உள்ள கருவி அமைப்புகளில் 80 சதவீதம் காலாவதியானவை என்றும், இது தவிர, சிறிய விரிசல்கள் தென்படுவதாகவும் அது காலப்போக்கில் பெரிதாகலாம் என்றும் ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் விண்வெளி வீரர் விளாதிமிர் சோலோவ்யோவ் தெரிவித்தார்.

இதற்கிடையே சமீபத்தில், ஈலோன் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், 2030 வரைகூட அவகாசம் அளிக்கக்கூடாது, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்தை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்று பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார். அதேநேரம், இது தொடர்பான முடிவை அதிபர் டிரம்ப்தான் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

"சர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுப்பாதையில் இருந்து அகற்றுவதற்கான பணிகளைத் தொடங்க வேண்டிய நேரம் இது. எந்தக் காரணத்திற்காக அது நிறுவப்பட்டதோ, அது பூர்த்தியாகிவிட்டது. இனி நாம் செவ்வாய்க் கோளில் கவனம் செலுத்துவோம்" என்று அந்தப் பதிவில் கூறியிருந்தார் ஈலோன் மஸ்க்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது இணைக்கப்பட்டிருக்கும் ரஷ்யாவின் சோயுஸ், ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் உள்பட 5 விண்கலங்கள் (சித்தரிப்புப் படம்)
 ஒரு கால்பந்து மைதானம் அளவுள்ள விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வரும்போது, வளிமண்டல இழுவை (Drag) காரணமாக அவ்வப்போது அதன் சுற்றுப்பாதையில் பாதிப்பு ஏற்படும்.

அதை அப்படியே விட்டுவிட்டால், சூரியனின் தாக்கம் காரணமாகவும் அது பாதிக்கப்பட்டு ஓரிரு ஆண்டுகளில் தனது சுற்றுப்பாதையில் இருந்து முழுவதுமாக விலகி, பூமியை நோக்கி விழும்.

அது பூமியில் வாழும் மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவேதான் 'ரீ-பூஸ்ட்' (Re-boost- விண்வெளி நிலையம் தொடர்ந்து செயல்படுவதற்கான உந்துதல்) என்ற செயல்முறை தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தைச் செயலிழக்கச் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று நாசா கூறுகிறது. அதன் முதல்கட்டமாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையானது வளிமண்டல இழுவையின்கீழ் தானாகச் சிதைவதற்கு அனுமதிக்கப்படும். அதாவது 'ரீ-பூஸ்ட்' செயல்முறை குறைக்கப்படும்.

அதுமட்டுமின்றி பிராக்ரஸ் (ரஷ்யாவின் விண்கலம்) போன்ற விண்வெளி நிலையத்துடன் டாக் (Dock) செய்யப்பட்ட விண்கலம் மற்றும் பிற உந்துவிசை மாடியூல்கள் மூலம், விண்வெளி நிலையத்தின் வேகத்தைக் குறைக்கும் செயல்முறைகள் மேற்கொள்ளப்படும்.

அதன் அத்தியாவசியமற்ற மாடியூல்கள் பிரிக்கப்பட்டு, தனித்தனியாக சுற்றுப்பாதையை விட்டு நீக்கப்படலாம். இந்தக் காலகட்டத்தில் (2026 முதல் 2030), 415 கி.மீ என்ற உயரத்திலிருந்து படிப்படியாக அதன் உயரம் குறையும்.

 விண்வெளி நிலையத்தின் உயரம் 280 கிலோமீட்டராக குறைக்கப்படும். பின்னர் பிரத்யேக விண்கலத்தின் உதவியுடன் அதன் தூரத்தை 120 கிலோமீட்டராக குறைக்கும் வகையில் இறுதி உந்துதல் அளிக்கப்படும்.

இந்த முயற்சிகள் திட்டமிட்டப்படி வெற்றியடையும் பட்சத்தில், பூமியில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவை சர்வதேச விண்வெளி நிலையம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு நிலையம் 120 கிலோமீட்டர் தொலைவை அடைந்தால், அப்போது பூமியின் வளிமண்டலத்தை அது மணிக்கு 29 ஆயிரம் கிலோமீட்டர் என்ற அதிபயங்கர வேகத்தில் தாக்கும்.

ஆனால், வளிமண்டல மறுநுழைவின்போது அதீத வெப்பத்தின் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிடும் என நாசா கூறுகிறது.

மீதமுள்ள பாகங்கள் பசிபிக் பெருங்கடலின் 'பாயின்ட் நீமோ' எனும் பகுதியில் விழும். அது மக்கள் வாழும் பகுதி இல்லை என்பதாலும், வழக்கமாகத் தேவையற்ற விண்கலங்கள் இங்கு விழும் என்பதாலும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று நாசா கூறுகிறது.

இவ்வாறு சர்வதேச விண்வெளி நிலையத்தை, செயலிழக்கச் செய்து அழிக்க, ஈலோன் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாசா தேர்வு செய்தது. அதற்காக அந்த நிறுவனத்துடன் 843 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ஏழாயிரம் கோடி) மதிப்புள்ள ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.

  • இந்த விண்வெளி நிலையத்திற்கு ஓய்வு கொடுப்பதற்கு முன்பே தனியார் விண்வெளி நிலையங்கள் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்றும், அதன் மூலம் வணிக அடிப்படையில் விண்வெளிச் சேவைகளை, குறிப்பாக பூமியின் தாழ்வட்டப் பாதைக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என நாசா தெரிவிக்கிறது.

    இதற்காக, ஆக்சியம் ஸ்பேஸ், ப்ளூ ஆரிஜின் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன. 2031க்குப் பிறகு, பூமியின் தாழ்வட்டப் பாதையைக் கடந்து சந்திரன் மற்றும் செவ்வாய்க் கோள் போன்ற பகுதிகளுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களில் கவனம் செலுத்தப் போவதாகவும் நாசா கூறியுள்ளது.

    அதேநேரம் பிற நாடுகளும், தங்களுக்கான விண்வெளி நிலையங்களைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.

    பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனப்படும் இந்திய விண்வெளி மையத்தை இஸ்ரோ 2035ஆம் ஆண்டு நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மையத்தின் முதல் பாகம் 2028ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் எஸ். சோம்நாத் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

    முதல் பாகம் விண்ணில் செலுத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் கழித்து இந்தியா தனது விண்வெளி மையத்தை முழுமையாக இயக்கத் தயாராக இருக்கும்.

    கடந்த 2022ஆம் ஆண்டு சீனா தனது டியாங்காங் அல்லது 'சொர்க்க மாளிகை' எனப்படும் விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. தற்போதுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தைப் போல பல நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பில் உருவாக்கப்படாமல், சீனா மட்டுமே தனியாக இதை உருவாக்கியுள்ளது.

    வரும் 2031ஆம் ஆண்டுக்குப் பிறகு, இது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்றாக இருக்கும் 





Thursday, March 20, 2025

தெரியாமல் போவதெல்லாம் காணாமல் போவதில்லை: கவிஞர் தணிகை

 தெரியாமல் போவதெல்லாம் காணாமல் போவதில்லை: கவிஞர் தணிகை



அப்பா, கதிரவனைக் காணவில்லை என்றான் அபூர்வன்


மிகத் திண்மையான மேகத்திட்டில் கதிரவன் மறைந்திருந்தது...

கொஞ்ச நேரம் பொறு கண்ணு, அவசரப் பட்ட அபூர்வனை காண வைத்தார் கதிரவனை.


கைகளைத் தட்டியபடியே குழந்தை குதூகலித்தது.


நிலா எப்ப அப்பா வரும்,

வரும் வரும் இரவு வந்தவுடன் வரும் கதிரவன் சென்றவுடன் வரும்....இப்பகூடப் பார் மங்கலாகத் தெரிகிறதே...


விண்மீன்களை எல்லாம் காணவில்லையே?


இரவு வந்தது, கண்சிமிட்டிய விண்மீன் தொகுதிகளைப் பார்த்த குழந்தை மறுபடியும் ஆர்ப்பரித்தது.


எதெல்லாம், வீனஸ், நெப்டியூன், புதன், யுரேனஸ், சனி, வியாழன், செவ்வாய் என்று

தெரியாத போதும் அதெல்லாம் இருந்தன... பெயர் எல்லாம் மனிதர் கூட்டத்தின் அடையாளத்துக்குத்தானே! திசை எல்லாம் சென்றடையத்தானே.


எதுவுமே மறைவதுமில்லை, தோன்றுவதுமில்லை , இருக்கின்றன, பயணம் செய்கின்றன வாழ்வு முடிந்ததும் இல்லாமல் போகின்றன.


புவி நமை நமது வீடுகளை காடுகளை, ஆறுகளை, கடல்களை, மலைகளை எல்லாம் சுமந்தபடியே

சுற்றிக் கொண்டே பயணம் செய்கிறதே நம்மை சிந்தி சிதறி வீசி எறிந்து விடாமல்...விண்வெளியில்...


நீயும் உனது பாட்டியுடன் காரில் கோவிலுக்கு எல்லாம் செல்லும் போது (வாடகைக் காரில்தான்) நீ, காரில் இருப்பது தெரியாமலே வழியில் கடந்து போகும் மகிழ்வூர்திகளை எல்லாம் பார்த்து கார், கார் என்று கூவுவாயே, அப்போது உனக்குத் தெரியாதல்லவா நீ இருப்பதும் ஒரு காரில் என்பது...அதே போல இந்த புவியின் பயணம் அதில் நாம் கொஞ்ச நாள் பயணம் செய்வோம்.


எல்லாம் ஒரு தோற்றம் அதையே மாயை என்பாரும் உண்டு.

பசியும் கொசுவும் அதற்குள்  கடிக்க ஆரம்பித்து எல்லாம் அனுபவத்தால் உணர்தல் நிகழ்கிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

சந்திரன், சூரியன், கதிரவன் என்ற ஆண்பால் விகுதிகூடத் தவறானதே.கதிர்,நிலா என்பதோடு சீர் செய்யப் பட வேண்டிய பெயர்கள் அவை. அல்லது விண்மீன், துணைக் கோள்

Friday, March 14, 2025

பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது...: கவிஞர் தணிகை

 பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது: கவிஞர் தணிகை



உனது இருண்ட  வீட்டை 

துணிந்து 

பார்த்துக் கொண்டே செல்கிறேன்

ஏனெனில்

உனக்கும் எனக்கும் எதுவுமில்லை


உனது வெளிச்சமிகு வீட்டை

பார்க்காமல் குனிந்து கொண்டே செல்கிறேன்

ஏனெனில்

எனக்கும் உனக்கும் எதுவுமில்லை


எனது நிலவுகளையும்

எனது சூரியன்களையும்

மறைப்பது யார்?


துரோகம்

நம்பிக்கைத் துரோகம்


பட்டியல் நீண்டு கொண்டே...


             கவிஞர் தணிகை


* நிலாக்கள் : துணைக்கோள்கள்

  சூரியன்கள்: விண்மீன்கள்: சூரியன்கள்


Wednesday, March 5, 2025

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்: கவிஞர் தணிகை

 கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்: கவிஞர் தணிகை




செயற்கை முறை கருவூட்டல் மையங்கள் எப்படி நிறைய பெருகி வருகின்றன? என்ற கேள்விக்கு உண்ணும் உணவில் இரசாயன உரங்களின் கலப்பே பெரிதும் சொல்லப் படும் ஒரு காரணம்.அல்லது உணவு முறை போன்றவை சிறிய வயது பெண் பூப்படைதலுக்கு வேண்டுமெனில்( இந்தக் காரணம்) சரியானதாக இருக்கலாம்.


ஆனால் இப்போது பெண்கள் குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலத்தில் நிறைய படித்து பணிக்கு(ம்) செல்கின்றனர், தகவல் தொழில் நுட்பம், கணினி சார்ந்த பணிகளில் அளவை விட ஊதியம் அதிகம். எனவே அவர்கள் அதை விட அல்லது அந்த அளவிலாவது ஆண்களை மணமுடிக்க எதிர்பார்க்கின்றனர்.


வயது கூடுகிறது. அதிலும் ஒரு பெற்றோர், அல்லது அந்த ஊதியத்தை இழக்க விரும்பாத , அந்த ஊதியம் தேவைப்படும்,அந்த ஊதியத்தை விரும்பும் பெற்றோர், மற்றும் அந்தப் பெண்கள் சாதாரணமாக மணமுடிக்க ஒத்துப் போவதில்லை. எனவே வயது கூடுகிறது. எமது காலத்தில் பெண்களின் ஊதியத்தை மணமானதும் அந்தப் பெண் போகும் புகுந்த வீட்டிற்கே தாரை வார்த்த காலம் எல்லாம் வேறு.


ஒரு ஆய்வில் தெரிய வந்தது என்னவெனில் 1980களில் இருந்து 1990ல் பிறந்த நாளை(க் கூட )வைத்திருக்கும்  பெண்டிர்கூட‌ இன்னும் மணமகனைத் தேடும் படலத்தில் காத்திருக்கின்றனர்.எங்கோ போகும் பயணம்?


ஆக பொதுவாக தோராயமாக 25 வயது முதல் 35 வயது வரையில் தாம் பெண்டிருக்கு கருவுறும் வாய்ப்புகள் அதிகம் அதன் பின் பெரும்பாலும் பிள்ளைகளைப் பெறும் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கும். விதிவிலக்குகள் வேறு.


அதில் வேறு மேற்கத்திய கலாச்சாரம் வேறு திறந்து காட்டப் பட்டதன் விளைவாக எதற்கும் துணிச்சலான காரியங்களில் பெண்கள் ஈடுபட்டு வருவதாலும் இது போன்ற காலப் பிறழ்தல்கள் நிகழ்ந்த‌ வண்ணம் இருக்கின்றன.


அதற்காக ஆண்கள், மணத்துக்காக காத்திருக்கும் ஆண்களை யோக்கியர்கள் என்ற ஒரே பட்டியலில் அடைக்கும் நோக்கமும் இந்தப் பதிவின் நோக்கமல்ல.


பாராளுமன்ற தொகுதிகள் குறைக்கப் படும் வாய்ப்பு தென்னக மாநிலங்களுக்கு இருப்பதாக சர்ச்சை, இதில் குறைக்கவில்லை, குறைக்கப் படப் போவதில்லை என்பதற்கும் மாறாக வட மாநிலங்களின் தொகுதிகள் அதிகம் செய்தல் என்ற ஒரு போக்கும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. அட வேண்டாங்க அரசியல் பேசினாலே நமது நண்பர்களுக்கு பிடிப்பதில்லை.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Monday, March 3, 2025

மகா நதி: கவிஞர் தணிகை

 மகா நதி: கவிஞர் தணிகை



காலமெனும் மகா நதி ஓடிக் கொண்டே...

பருக்கைத் துகள் கற்களின் சிதைவோ, பாறாங்கல்லோ உருண்டபடியே பயணம் செய்த சுவடு கூட இன்றி...


மகாநதி எனும் ஒரு கமலின் திரைப்படத்தில் தொலைந்து போன மகளை சோணாகஞ்ச் என்னும் மேற்கு வங்க கொல்கொத்தா நகரின் சிவப்பு விளக்கு பகுதியில் கண்டடையும் அந்த தந்தை பாத்திரம்.


அப்போது மயிர்க்கூச்செறியும் வண்ண‌ம் அந்த தடைகளை உடைத்தெறிந்து அந்த உடலை விற்கும் பாலியல் தொழில் பெண்டிர் அந்தப் பெண்ணை விடுவிப்பார்கள் அந்த தொழிலில் இருந்து. பார்ப்பதற்கே சொல்லில் வடிப்பதற்கே முடியாத அந்தக் காட்சி அமைவு ஏனோ எனது நினைவு அலைகளில் வந்தாடிக் கொண்டே இருக்கிறது சில நாட்களாக...


ஊடகங்கள், சமூக ஊடகங்கள் தரும் பாதிப்புகள் நற்சமூக அமைவுக்கு ஏற்றதாக இல்லை.


அடி முதல் நுனி வரை உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை அதன் தலைவர்கள் வரை என்றோ ஒரு தலைவர் அமெரிக்காவில் சொன்ன நினைவு பாலியல் தொழிலை விட மோசமானதே அரசியல் என்ற கருத்தும் சுழலாக வந்து கொண்டிருக்க எத்தனை புரட்டுகள் புனை சுருட்டுகள்... செரிக்க முடியவில்லை எனவே இந்தப் பதிவை தேவையின் பாற்பட்டு செய்து விடுகிறேன்.ஆனால் அரசியல் இல்லாமல் மனித அசைவு இல்லை என்பதுதான் இன்றியமையாதது என்பதும் தான் அனைவராலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிதர்சனம்.


பாலியல் தொழில் கூட கேவலமில்லை அதன் தன்மைகள் மேலாயிருக்கையில்... அதற்காக என்னை அப்படிச் சொல்லி விட்டார்களே என ஒரு பெண்  அழுவதும், ஒரு அரசியல் நபர் என்னைப் பாலியல் குற்றவாளி என எப்படிச் சொல்லலாம் எனக் கேட்பதும், அதை ஊடகங்கள் அடிபிறழாமல் சில நாட்களாக அஞ்சல் செய்வதும் வேறு எந்த செய்தி நடப்புகளுமே இல்லை என்ற பேரில் நுகர்வோரை சாகடித்து வருவதும்...இதில் இருந்து எல்லாம் வெளிவந்து


இன்றைய மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வில் சாதனை செய்ய வாழ்த்து சொல்வது சிறந்தது என எண்ணுகிறேன்


தம்பி தங்கைகளே, குழந்தைகளே இந்த தேர்வு உங்கள் வாழ்வின் திறவுகோல்:சிறப்பாக செய்யுங்கள். வாழ்த்துகள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Saturday, February 22, 2025

மேட்டூர் பேருந்து நிலையம் புதுப் பொலிவுடன்: கவிஞர் தணிகை

 மேட்டூர் பேருந்து நிலையம் புதுப் பொலிவுடன்: கவிஞர் தணிகை




22.02.2025 இன்று சுமார் எழுபது கோடி ரூபாய்களுக்கும் மேலான திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டும், நிறைவடைந்த பணிகளை ஆரம்பித்து வைத்த நிகழ்வுகளும் மேட்டூர் பேருந்து நிலைய அழகிய பந்தல் வளாகத்தில் நடைபெற்றது. மேட்டூர் பேருந்து நிலையம் இன்று முதல்  புதுப் பொலிவுடன் இயங்க ஆரம்பித்துள்ளது அதை நகராட்சிதுறை அமைச்சர் துவக்கி வைத்தார்.


மாண்பு மிகு அமைச்சர்கள், கே.என். நேரு, எஸ். ராஜேந்திரன், மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள்:  சேலம் செல்வகணபதி, தர்மபுரி மணி,கள்ளக்குறிச்சி மலையரசன் கூடுதல் மாவட்ட ஆட்சியர், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சதாசிவம்,நகராட்சி ஆணையர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், ஆகியோர் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.


அமைச்சர் கே.என். நேரு அவர்கள் திட்டங்களைத் துவக்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் உரையாற்றினார். அத்துடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அவர்கள் சேலம் மாவட்டத்துக்கான தமிழக அரசின் பங்கு பணிகளை எடுத்துரைத்தார்.


வழக்கம் போல மண்ணின் மைந்தர் சட்ட மன்ற உறுப்பினர் சதாசிவம் அவர்கள் அவருக்கே உரிய பாணியுடன் மக்கள் பிரச்சனைகளை எடுத்து இயம்பி அரசின் திட்டங்களை ஈர்க்கும் வண்ணம் சிறப்புரையாற்றினார்.


நிகழ்ச்சிகளை  சிறப்பான முறையில் நகராட்சித் துறை மற்றும் குடி நீர் வழங்கல் துறை ஏற்பாடு செய்திருந்தது.பொது மக்களின் மனுக்களும் பெற்றுக் கொள்ளப் பட்டன.திரளான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



Friday, February 7, 2025

சாதனை வெளித் தெரியாமலும் இருக்கலாம்: கவிஞர் தணிகை

 சாதனை வெளித் தெரியாமலும் இருக்கலாம்: கவிஞர் தணிகை



வேர்கள் வெளித் தெரியாது எப்போதுமே.இந்த காலைப் பனிப் பொழிவுக்கிடையே ஒரு பணிப் பொழிவுடனான இந்தப் பதிவுக்கு ஒரு நல் காரணம் இருக்கிறது. எத்தனை பேர் எனத் தெரியாத  எண்ணிக்கையற்ற  தியாகிகளின் தியாகத்தால் விளைந்த இந்த நாட்டில் இது போன்ற பதிவுகள் அவர்களுக்கு ஒரு அஞ்சலி என்ற பேரில்.


எமது "அளவுக்கு மிஞ்சினால்" என்ற பாலியல் விழிப்புணர்வு நூல் நிறைய குடும்பங்களின் வாழ்வில் மாயங்களை நிகழ்த்தி உள்ளதை கேள்விப் படுவதன் மூலம் அறிந்து மகிழ்கிறோம். மகிழ்ந்தோம். மகிழ்வோம்.


நிறைய பேர் வாழ்வில் இது போல விதை விதைத்து மாறுதல் நிகழ்த்தி வைப்பவரே காலத்தை விஞ்சி வாழ்வோராக கருதப் படுவார்.


அடியேனறிந்த வரையில் அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், சுதந்திரப் போர்த் தியாகிகள் போன்றோர் இந்தப் பணியைச் செவ்வனே செய்கிறார்கள்


P. ஆசைத் தம்பி என்ற ஒரு தூய்மைப் பணியாளர் குடும்பத்து இளைஞர் இராஜஸ்தான் ஜெய்ப்பூர் வரை சென்று கபடி விளையாடி கோப்பை வென்றதாக ஊருக்குள் பாராட்டு. பதாகை. நண்பர் நடைப்பயிற்சியின் போது பகிர்ந்தார்.


கடைசியில் பார்த்தால் அது நாங்கள் அதாவது எமது குடும்பம் நன்கறிந்த எங்களால் வழிகாட்டப் பட்டு ஆலோசனை தந்து, அறிவுரை செய்து கொடுத்த "அளவுக்கு மிஞ்சினால்" என்ற நூலின் அனுபவச் சாரம் விளைவித்த விளைந்த விதை அது...பெரியசாமி, இராஜேஸ்வரி என்ற தம்பதிகள் எங்களுடன் பழகி வந்த காலத்தில் அவர்களுக்கு 4 பெண்குழந்தைகள், ஐந்தாவதாக பிறப்பதாவது ஆண்குழந்தையாக இருக்க‌ வேண்டும் என்று ஏங்கிய சூழலில் இந்த நூல் அது போன்ற செயல்களுக்கு வழிகாட்டும் என்று கொடுத்து அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வைத் தந்ததால் அந்த குடும்பத்தில் வந்த வாழ்வின் விந்தை இன்று இராஜஸ்தான் ஜெய்ப்பூர் வரை சென்றதை அறிந்தோம் மகிழ்கிறோம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Friday, January 24, 2025

sir/madam: post:(வைரஸ்) வைரல் விஷக் கிருமியாகப் பரவுகிறதுஇணையத்தின் வழி: கவிஞர் தணிகை

 (வைரஸ்) வைரல் விஷக் கிருமியாகப் பரவுகிறதுஇணையத்தின் வழி: கவிஞர் தணிகை



1. கேரளத்து பள்ளி மாணவன் செல்பேசியைத் திரும்ப கொடுக்கச் சொல்லி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரை கொன்று விடுவதாக மிரட்டுவது


2. ஆந்திரத்து ஹைத்ராபாத்தில்: ஓய்வு பெற்ற இராணுவ வீரர் தமது அன்பு மனைவியை துண்டுகளாக வெட்டி குக்கரில் வைத்து இரண்டு நாளாக வேக வைத்து சாட்சியங்களை அழிக்க முயன்றது, வேகாத எலும்புகளையும் நொறுக்கி எடுத்து அதையும் வேக வைத்து அடையாளமின்றி மூட்டையாக்கி நீர் நிலையில் வீசியதை அவரே வாக்கு மூலமாக தந்தது


3.  வட மாநிலம் ஒன்றில் மகளே தந்தையை மணந்து கொண்டு எனக்கு எவர் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலை ஏதும் இல்லை என்பது மேலும் கேள்விப்பட்ட ஒரு செய்தியில் மகன் தாயை மணந்து கொள்வது என்பதான ஆண் ஆணை ,பெண் பெண்ணை இப்படி மணம் செய்து கொண்டதாக செய்திகள் வருவது...


4. மதம் என்ற பேரில் காட்டுமிராண்டித் தனத்தின் உச்சமாக‌ ஆண்குறியில் தூரியாக எதை எதையோ கட்டி இழுத்து ஆட்டியபடி முழு நிர்வணமாக திருநீறு மேனியில் பூசியபடி பக்தர்கள் தலையில் (ஆண்/பெண்கள்) தூரிகை கொண்டு ஆசி வழங்கு காசு வாங்குவது, அவர்களையும் வணங்கி காணிக்கை வழங்கி ஆசி பெறுவது பால் வேறுபாடின்றி பெண்களும் கூட...


5. + என்ற குறியுடன் எந்த நாடு என்றே அதன் அடையாள கோட் நெம்பர் தெரியாமல் 11 இலக்க எண்களுடன் செல்பேசிக்கு அழைப்பு வந்து மற்றவர்க்கு தொல்லை அளிப்பது...


6. ஈராக் நாட்டில் பெண்களின் திருமண வயதை ஷியா பிரிவுக்கு 9 சன்னி பிரிவுக்கு 13 என்று ஆக்கி உள்ளது...குழந்தை திருமண அங்கீகாரத்தை அரசே ஆதரிப்பது...மதப் புனிதம் என்ற பேரில்...


7. தமிழகத்தின் நாகரீகத்தில்தாம் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை அறிந்த, பயன்பாட்டிற்கான தொல்லியல் ஆய்வு உலகுக்கு தமிழர்தம் பாரம்பரியத்தை பறை சாற்றுவது...(அப்பாடா ஒரு நேர்மறையான செய்திக்கு வந்து சேர்ந்து விட்டோம்)

8. ட்ரம்ப் பதவியேற்றவுடனேயே அமெரிக்காவை உலகுக்கே தலைமை நாடாக நினைத்து உலகையே ஆட்டிப் படைக்க நினைப்பது போன்ற செய்திகளாக: கிரீன்லாந்தை வாங்குவோம், கனடாவைக் சேர்த்துக் கொள்ள நினைப்பது,ரசியாவை பொருளாதாரத் தடை விதிப்பதாகச் சொல்லி பேச்சு வார்த்தைக்கு அழைப்பது இன்னும் சுனிதா வில்லியம்ஸை  சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புவிக்கு திரும்ப அழைத்து வராதது...இப்படியாக...


இவை யாவும் புவி நடப்புகளாக மனிதத்துக்கு வரும் செய்திகள் வைரலாக வைரஸாக... இவற்றின் பாதிப்புகளில் இருந்து எல்லம் நீந்தி வெளிவந்து அவரவர் பிள்ளைகளை அவரவர் தலைமையில் அவரவர் தலைமுறைகளை காத்துக் கொள்ள வேண்டியது அந்த அந்த தனி மனிதர்களின் கடமையாகும். இனி சமூக வழியில் பயணம் போனால் விவேகனந்தர் சொல்லியபடி நல்மாந்தரின் மூன்றாம் தலைமுறையில் சந்ததி  வளர வாய்ப்பே இல்லை


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Tuesday, January 21, 2025

திருமண வாழ்த்து மடல்

                                         திருமண வாழ்த்து மடல்

     மண மகன்: சு.ஹரிசங்கர் B.E.,              மணமகள்: மு.தீபலட்சுமி B.E,

           மண நாள்: 10.02.2025   திங்கள் கிழமை   S.M திருமண மஹால் 



                        இரு மன இணைப்பிற்கு ஒரு திருமண வாழ்த்து 


மானிடம் என்பதே மகிழ் மகிமை அதில் மண்டிய யாவுமே பெருமை

மங்கை மலர்களே அருமை அவர் அறநெறி ஆபரணமே பொறுமை!


வாழ்க்கை என்பதோர் வசந்தமதில் வஞ்சிக் கொடி படர்வதே சுகந்தம்

சேர்க்கை என்பதோ அனந்தம் அதில் சேர்ந்தே இருப்பதே புனிதம்!


தாம்பத்யம் என்ப‌தோர் சுரங்கம் அதில் சம்பவங்களாய் சதுரங்கம்

தர்மபத்தினியின் அங்கம் அதில் பத்தரை மாற்றுத் தங்கம்

தங்க மகுடத் தலையங்கம்!


நாளெல்லாமே சொர்க்கம் அதை உணர்வதால் மேலிடும் வெட்கம்

இனியிவர் காலையெலாம் அரும்பும் பூக்கள் காதல் காற்றும்

இவர்கள் பக்கம்!


வாலிபம் என்பதே பூவின் முகம் அதை வாடாமல் வளர்ப்பதே

வயதின் இதம்.

சாந்தம் என்பதே தெய்வீகமதை சார்ந்து நிற்பதே மனித நேயம்!


சந்திர ஒளியின் சேகரமிதோ சுந்திரவ‌டிவிற்கோர் சாகரமிவர்

எந்திர வாழ்வில் சாந்தி வர மந்திர வடிவினில் காந்த மணம்!


ஹரிசங்கர் தீபலட்சுமி வாழ்க்கை வண்ண மலர்களின் சேர்க்கை

நேர்ந்த இணைப்போ வெகு நேர்த்தி வாழ்ந்து சொல்வார் சிறப்பு சேர்த்து!

அமுதா சுப்ரமணியின் நல்முத்து நான் பெயர் வைத்த கோப்பெருந்தேவன் 

அமைதிக்கு ஓர் அடையாளம் அதிகம் பேசாத செயல் வீரம் இவர் தம் நாளில் 


பூப்பது திங்கள் புலருமிக்காலை சேர்வது மாலை சேர்ப்பது மணவேளை

முப்பது பத்து நாளை  பின் தள்ளி இப்பூந்தளிர் சாலைகள் பூக்கட்டும்

பைந்தளிர் சோலையை என்ற வாழ்த்து ஓலையைக் கோர்க்கும்


                                      அன்பு நெஞ்சங்கள்

                                       கவிஞர் தணிகை

த.சண்முக வடிவு& T.G.R.S.மணியம் B.E.,M.B.A pursuing

                       




அப்பாவின் திருமண வாழ்த்து பிள்ளைக்கு

                                   


                          அப்பாவின் திருமண வாழ்த்து பிள்ளைக்கு


க.அருண்பாரதி  B.E, L.L.B(Hons)                                 நா.பார்கவி B.B.A, L.L.B(Hons)

திருமண வரவேற்பு இடம்: நாமக்கல் கோஸ்டல் ரெசிடென்சி சிந்து மஹால்‍ 

நாள்: 02.03. 2025 ஞாயிற்றுக் கிழமை நேரம்:மாலை:6மணி முதல் இரவு 9மணி



கருணாநிதி வழி சரஸ்வதி வழி அருண் பாரதி வழி பார்கவி அறிந்தோம்

             ஒலி,மொழி இலா உணர்வலை எம்முள் திகழும் பரவும்


           தகதகவென தகதகவென சுழன்றாடும்  கதிரொளியில்

                            காலைப் பனிப்புல்லும் மலர்ந்தாடும்

           கலகலவென கலகலவென நீரோடும் காற்றும் தீயும்

                           கலந்தொரு சுடர் உருவாகும்!


        கணகணகணவென கணகணவென கனவொடு மணியாடும்

                    காதுகளே கண்களாகிட உயிர் ஒளியாகும்

            பளபளவென பளபளவென முகமாகும் பலப்பல‌

          நிறங்களும் குணங்களும் மணங்களும் உள்ளாடும்!


     பாரெலாம் கவி விளைந்தாடும் இடமெலாம் கலையாகும்

         அருண் பாரதியின் வாழ்வுமதனால் சுவையாகும்

       கல்வியும் செல்வமும் சேர்வதென்பது அரிதாகும்

          கலந்தொருமித்தது அதனாலிங்கு பெரிதாகும்!


          கருத்தொருமித்து வாழ்வதென்பதே நெறியாகும்

      கணக்கிரு பிள்ளைகள் பெறுவதின்றைய அறமாகும்

          அளவறிந்தபடி வாழச் சொல்வதே தமிழாகும்

         அதிகம் போனால் அமிழ்தும் கூட நஞ்சாகும்.


என்று(ம்) வாழ்த்துவது சுடர் தணிகையின் நெஞ்சாகும்


                                         கவிஞர் தணிகை

                  த.சண்முக வடிவுடன் த.க.ரா.சு.மணியம்.