Wednesday, December 11, 2024

திரு ஆசான் ஜி : கவிஞர் தணிகை

 திரு ஆசான் ஜி : கவிஞர் தணிகை



ஆசான் ஜி என்னும் இந்த மக்கள் வழிகாட்டியின் சில உரைகளை அடியேன் கேட்டிருக்கிறேன். மிகவும் துணிச்சலாக விடயங்களை அலசி பிழிந்து காய வைத்து தெளிவு படுத்தி விடுகிறார். மேலும் கேட்பார்க்கு அல்லது இவரை நாடி வருவார்க்கு நல் நம்பிக்கையை அளிக்கும் விதமாக தெம்பைத் தரும் சொற்பொழிவை வழங்குகிறார். வாழ்க.


சில சந்தேகங்கள்: கோள்களை விட மாந்தர் பெரியவரே என்றும் சந்திரனில் மனித முயற்சியில் சந்திராயனை இறக்கி விட்டதும் உண்மைதானே அது தலையில் இறங்கியதா, உடலில் இறங்கியதா, அல்லது தொடையில் இறங்கியதா என்றெல்லாம் கேட்க முடியுமா? என்கிறார்.


 தேகம் உடல் என்னும் சந்திரன் என்று சொல்லப் படுவதால்.


சோதிடக் கலையில் தேகம்  உடல்:சந்திரன்...தாய், ஆன்மா அல்லது உயிர், சூரியன் தந்தை என்கிறார்கள்.


இவருடன் பல கருத்துகளில் ஒத்த தன்மை ஏற்படுகிறது.கடவுள் உலகை நம்மை படைத்ததாகத்தான் இவரும் சொல்கிறார். (அடியேன்  இவரது உரையை புரிந்த வரையில்)


ஆனால் சோதிடக் கலை இல்லை அல்லது தேவை இல்லை, அல்லது பொய் என்கிறாரா? 


வாஸ்து பொய் என்று சொல்லி இருக்கிறார். புவியின் அமைப்பை உருவை பார்க்கும் போது அவர் கூறுவது சரிதான் என முடிவுக்கு வர முடிகிறது.


அல்லது நாட்டை ஒரு சமத்துவ சமுதாயம் சார்ந்த ஆட்சி முறைக்குள் கொண்டு வரும் போது எந்த வாஸ்தை பார்க்க முடியும் நிலம் யாவும் அரசின் பால் பொதுவுடமை என்னும் போது? அல்லது வாடகைக்கு இருப்பார் அல்லது வீடே இல்லாதார் எந்த வாஸ்தை பார்க்க முடியும்? எல்லாவற்றிலும் வியாபாரக் கலப்பு. 


பூமியே ஒரு உருண்டைதானே அதுவும் சிறிது சாய்ந்து சுழன்றபடி ஓடிக் கொண்டிருப்பதுதானே, அதிலும் அத்துடன் நாம் விண்வெளி யாவற்றையும் சற்று உற்று நோக்க கற்றுக் கொண்டால்...திசை என்பது கூட ஒரு கற்பனைதானே....சூரியோதயம், மறைவு என்பதெல்லாம் கூட ஒரு காட்சி வடிவம் தானே...ஆனால் அதனால் பாதிப்புகள் எண்ணிறந்தன....


நிலா ஒரு துணைக்கோள்தான், ஆனால் அது தோற்ற மாறுதல் புவியில் இருப்பார்க்கு ஏற்படுத்தும் போது கடலில் ஓத ஏற்றம், ஓத இறக்கம், கடலில், அலைகளில் எல்லாம் மாற்றம் நிகழ்கிறது என்பதை அறிவியலும் சொல்கிறதே...மேலும் அவ்வப்போது இந்த மாற்றங்கள் யாவும் உயிர்களில் சிறப்பாக அமாவாசை, பௌர்ணமி போன்றவை நெருங்குகையில் மனித உயிரிகளிடம் உடல் மாற்றங்கள் நோய்கள், மரணங்கள் கூட நிகழ்வதாக மருத்துவம் கூட தெரிவிக்கிறதே...இதில் எல்லாம் தெளிவு தேவை அல்லவா? பாதிப்புகள் இருப்பதை ஏற்படுவதை, நடப்பதை முற்றிலும் மறுக்கவும் முடியவில்லையே!


மனித உடலும் ஒரு சிறு கூறு...இயற்கையில். எனவே இயற்கையின் கால நிலை நிகழ்வுகள் யாவும் இந்த உடலையும் பாதிக்கிறதே வெயில், குளிர், மழை போன்ற எல்லா இயற்கை பாதிப்புகளில் இருந்தும், அதில் இருந்தெல்லாம் எப்படி விலகுவது?  விலக முடியாதே....கோள்களின் ஆட்சி அந்த வாழ்வின் ஆயுளில் இருப்பதாக சித்தர்கள் கூட மொழிந்ததாக இருக்கிறதே...அதே நேரம் சிலரை கோளென்ன செய்யும் நாளென்ன செய்யும் என்பதையும் சொல்கிறார்களே?


பிரபஞ்ச வெளி, அண்டப் பெரு வெளி ஆகியவை பற்றி அறியும் போது கோள்கள் இவர் கருதுவது போல அறிவியல்  சொல்வது போல சிறு பிசிறுகள் தாம்... ஆனால் அந்தப் பிசிறுகள் பிறந்த சிசு முதல் இறக்கும் மனிதம் வரை பாதிக்கிறதா இல்லையா அதில் தெளிவு வேண்டும்.


புவி நில நடுக்கம், எரிமலைச் சீற்றம், சுனாமி, பிரபஞ்ச வெளி  வளி மண்டல நதிகள் இறக்கம்  போன்ற இயற்கை மாற்றங்கள் சீற்றங்கள் எல்லா உயிர்களையும் அழிப்பது போல மனித உயிரையும் அழிக்கும் போது சோதிடக் கலை அங்கு பயனற்றதாகவே போய்விடுகிறதே...


எம்.ஜி.ஆர் கை ரேகை பார்த்த பானுமதியின் கூற்று,சிவகுமாரின் தந்தையின் சோதிடக் கணிப்பு, (பிரபலங்களைச் சொன்னால் புரியும் என்பதற்காகவே குறிப்பிட்டுள்ளேன்)எல்லாம் பலித்து விட்டதே...



இப்படி எல்லாம் இருக்க மார்க்ஸ், லெனின், மாவோ, ஸ்டாலின்,பிடல், ஹோசிமின்,  போன்றோர் எப்படி மக்கள் சக்தியை மகத்துவமாக மாற்ற முடிந்தது...நல்லகண்ணுவால் அல்லது நம்மால் ஏன் அந்த அளவு முடியவில்லை?


நிறைய கேள்விகள், புதிர்கள், ஆர்வமுள்ளோர் அறிவு சார்புடன் கலந்துரையாடலாம்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


பி.கு:  முகூர்த்த நேரம்,நல்ல நேரம், கெட்ட நேரம், இராகு, குளிகை, எமகண்டம் கரிநாள், சூலம் வடக்கு தெற்கு இப்படியே பஞ்ச அங்க வழிகாட்டுதல், சகுனங்கள், பல்லி சொல்லல், மேல் விழுதல்...இன்ன பிற‌


Tuesday, December 10, 2024

நிற்காத இயக்கம்:கவிஞர் தணிகை

 புயல் பறவை



இறகசைக்கும் புயல்பறவை

காற்று(ம்) கலங்கி விடும்


கடல்கள் பொங்கி எழும்

அலைகள் அழும்


புயலின் பாடலுக்கு

தாவரங்கள் தலையாட்டும்

பூ மரங்கள் மலர் சொரியும்

கிளை ஒடிந்து தாளமிடும்

அடி பெயர்ந்து தண்டனிடும்


திகட்டும் நீர் நிலையும்

தரை கசிந்து பாய் நனையும்

தாழ்வாரம் நெக்குவிடும்


விளக்கணைந்து ஓலமிடும்

ஈ....ஈரப்ப்சை பற்காட்டும்

குளிர் சுரந்து கண் சிமிட்டி

உடல் சுருட்டும்

நிழல் விழாது

ஆனாலும் 


நிற்காது திருமணங்கள்


போர்வை கனம் தாங்காது

பூமி கொஞ்சமும் தாங்காது தூங்காது


கால் பாவும் இடமெல்லாம்

கல் பதிந்த இடமெல்லாம்

கனத்த எச்ச(ரிக்கை)ப் பதிவுகள்


சோதித்து 

நிலையாமை சேதி சொன்ன 

புயல் பறவை குரல் அடங்கி

கூடு திரும்ப‌

சி(ன்)னங்களுடன் கப்பல்கள் சுவாசிக்கும்


ஓடங்கள் தாய்வீடு திரும்பி விடும்


புழுங்கும் 

திரிசங்கு நிலைமாறி மன‌ம் புழுங்கும்

நுனி வேர்க்கும் மூக்கு

தியேட்டர்கள் முதுகொடியும்

ஹோட்ட‌ல்கள் வாய் கிழியும்


உயிரின‌ங்கள்

ஈனங்கள்....

தினவு பெறும்

தீ தாக தேடல் எழும்


     1990களில் இடம் பெற்ற மறுபடியும் பூக்கும் கவிதைத் தொகுப்பிலிருந்து


மறுபடியும் பூக்கும் வரை

 கவிஞர் தணிகை